| ADDED : ஆக 19, 2024 10:38 PM
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் மக்கள் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் எந்த நோய் நொடியும் இன்றி வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, சாமி தரிசனம் செய்துவிட்டு வருவர். அந்த வகையில், வெண்ணெய்க்கு பெயர் பெற்ற தாவணகெரே மாவட்டத்தில் பக்தர்கள் நோய் தீர்க்கும் கோவில் அமைந்துஉள்ளது. தாவணகெரேயின் ஹொன்னாளி பெலகுட்டி கிராமம் அருகே உள்ளது, தீர்த்த ராமேஸ்வரர் கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் நுழைவு வாயில் பகுதியில் பிரமாண்ட சிவன் சிலை உள்ளது.இந்த கோவிலில் பக்தர்களை ஈர்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், கோவிலுக்குள் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியை 'கங்கை நீர் தொட்டி' என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த தொட்டிக்கு, ஊற்றிலிருந்து தண்ணீர் ஆண்டுதோறும் வந்து கொண்டே இருக்கும். அந்த ஊற்று காசியில் இருந்து தோன்றியதாக பக்தர்கள் நம்புகின்றனர். தொட்டியில் இருந்து எடுத்து குடிக்கும் தண்ணீர் மிகவும் சுவையாகவும், சுத்தமாகவும் இருக்கும். அந்த தண்ணீரை குடித்தால் நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாத்திரங்கள், குடங்களில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.இந்த கோவிலில் மற்றொரு சுவாரசியமான விஷயமும் உள்ளது. படைப்பின் கடவுளான பிரம்மாவின் சிலை உள்ளது. சிலைக்கு பின்னால் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியின் மூலம் பிரம்மாவின் நான்கு முகத்தையும் பக்தர்கள் பார்க்க முடியும்.
எவ்வளவு துாரம்?
பெங்களூரில் இருந்து இந்த கோவில் 322 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து ஹொன்னாளிக்கு அடிக்கடி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயிலில் செல்பவர்கள் ஷிவமொகா சென்று அங்கிருந்து கோவிலை சென்றடையலாம். ஷிவமொகாவில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் கோவில் உள்ளது.
இருக்கும். அந்த தண்ணீரை குடித்தால் நோய்கள் குணமாகும் என்று பக்தர்கள் கருதுகின்றனர்
--- நமது நிருபர் --