துர்கேஷ் பதக்குக்கு ஜாமின் கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு
புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் துர்கேஷ் பதக்குக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்தது.டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டார். விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தனர். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கெஜ்ரிவால், துர்கேஷ் பதக் உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.இந்நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள கெஜ்ரிவாலுக்கு, வரும் 25ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, துர்கேஷ் பதக்குக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.