| ADDED : மே 23, 2024 10:22 PM
ஹாசன்: தசரா யானை அர்ஜுனாவை புதைத்த இடத்தில், கல்லறை கட்டும் பணிகள் நேற்று துவங்கின.மைசூரு தசரா ஊர்வலத்தில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட, தங்க அம்பாரியை எட்டு முறை சுமந்த யானை அர்ஜுனா, 64. கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி, ஹாசன் சக்லேஸ்பூரில் காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதலில், அர்ஜுனா உயிரிழந்தது. சக்லேஸ்பூர் அருகே தபளிகட்டே கிராம வனப்பகுதியில், அர்ஜுனா உடல் புதைக்கப்பட்டது.கடந்த சில தினங்களாக, தபளிகட்டே பகுதியில் பெய்து வரும் மழையால், அர்ஜுனாவின் சமாதி இருக்கும் இடத்தில் மண் கரைசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கல்லறை அமைக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்தது.கல்லறை அமைக்க நடிகர் தர்ஷனின் ஆதரவாளர் நவீன் என்பவர், வனத்துறையினர் வங்கிக்கணக்கில் 30,000 ரூபாய் செலுத்தி இருந்தார். இந்நிலையில் அர்ஜுனாவை புதைத்த இடத்தில், கல்லறை கட்டும் பணிகள் நேற்று முதல் துவங்கின. வன அதிகாரிகள் மஹாதேவ், அம்ரேகர் தலைமையில் பணிகள் நடக்கின்றன.