முன்னாள் அமைச்சரும், ஷிவமொகா தொகுதியின் சுயேச்சை வேட்பாளருமான ஈஸ்வரப்பா, மீண்டும் ராயண்ணா பிரிகேட் துவக்க தயாராகிறார்.பா.ஜ., மூத்த தலைவராக இருந்த ஈஸ்வரப்பா உட்பட சில மூத்த தலைவர்களுக்கு 2023 சட்டசபை தேர்தலில் 'சீட்' வழங்கவில்லை.சீட் கிடைக்காத கோபத்தில் லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் கட்சிக்கு முழுக்கு போட்டு, காங்கிரசுக்கு தாவினர். அதானியில் லட்சுமண் சவதி, ஹூப்பள்ளி - தார்வாட் தெற்கு தொகுதியில், ஜெகதீஷ் ஷெட்டர் களமிறங்கினர்.ஈஸ்வரப்பாவும் காங்கிரசுக்கு தாவக்கூடும் என, எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பா.ஜ.,விலேயே இருந்தார். இம்முறை லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் தன் மகன் காந்தேஷுக்கு சீட் தரும்படி மன்றாடினார். ஆனால் பா.ஜ., மேலிடம், பசவராஜ் பொம்மையை வேட்பாளராக அறிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொகாவில் பா.ஜ., வேட்பாளர் ராகவேந்திராவுக்கு எதிராக, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.கட்சி மேலிடத்தின் எச்சரிக்கைக்கும் பணியவில்லை. எரிச்சலடைந்த பா.ஜ., மேலிடம், இவரை ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கியது. இதை பொருட்படுத்தாத ஈஸ்வரப்பா, 'நான் ராகவேந்திராவை தோற்கடித்து வெற்றி பெறுவேன். அதன்பின் பா.ஜ.,வில் இணைவேன்' என, நம்பிக்கையுடன் கூறுகிறார்.இந்நிலையில் அவர் மீண்டும் ராயண்ணா பிரிகேடை துவக்க தயாராகிறார். 2018 சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வுக்கு பிற்படுத்தப்பட்ட பிரிவு தலைவர் தேவைப்பட்டார். காங்கிரசின் பிற்படுத்தப்பட்ட குருபர் சமுதாய தலைவர் சித்தராமையாவுக்கு மாற்றாக, பிற்படுத்தப்பட்ட தலைவராக உருவெடுக்க ஈஸ்வரப்பா திட்டமிட்டார். இதற்காக 'சங்கொல்லி ராயண்ணா பிரிகேட்' என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தினார்.இது பா.ஜ.,வுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. மேலிடத்தின் உத்தரவுப்படி, இந்த அமைப்பில் இருந்து விலகினார். தற்போது இவர் மீண்டும் ராயண்ணா பிரிகேட் அமைப்பை துவக்க திட்டமிட்டுள்ளார்.இது குறித்து ஈஸ்வரப்பா கூறியதாவது:பிற்படுத்தப்பட்டோருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும் என, சங்கொல்லி ராயண்ணா அமைப்பை உருவாக்கினேன். இதை நிறுத்த வேண்டும் என, அமித் ஷாவும், எடியூரப்பாவும் கூறியதால், மறு பேச்சு பேசாமல் நிறுத்தினேன். ராயண்ணா பிரிகேட் இப்போது இருந்திருந்தால், பிற்படுப்பட்டோருக்கு நியாயம் கிடைத்திருக்கும்.நான் எப்போதும் தலைவர்களின் பேச்சை மீறியது இல்லை. அவர்கள் பேச்சை நான் மீறியிருந்தால், அனைத்தும் சரியாக இருந்திருக்கும். லோக்சபா தேர்தல் முடிந்த பின் தலித், பிற்படுத்தப்பட்டோர் கூட்டம் நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.அதிகாரிகள் மீது பாய்ச்சல்ஷிகாரிபுராவின், ஷிராளகொப்பா கிராமத்தின், மைலார லிங்கேஸ்வரா கோவில் வளாகத்தில், நேற்று முன் தினம் மாலை, ஈஸ்வரப்பா பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருந்தார்.பிரசாரத்துக்காக மேடை அமைத்திருந்தனர். மைக்குகள், இருக்கைகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால் இறுதி வினாடியில் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், பிரசாரம் நடத்த கூடாது என, உத்தரவிட்டனர். கோபமடைந்த ஈஸ்வரப்பா, சாலை ஓரத்திலேயே நின்று பேசினார். அதிகாரிகளின் செயலை கண்டித்தார்- நமது நிருபர் -.