கேரள காங்., - எம்.எல்.ஏ.,விடம் ரூ.50 லட்சம் பறிக்க முயற்சி போலி சி.பி.ஐ., அதிகாரிக்கு வலைவீச்சு
திருவனந்தபுரம்:கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா தொகுதி காங்., - எம்.எல்.ஏ., அன்வர் சாதத். இவரது மகள் டில்லியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருக்கு, 'வாட்ஸாப்'பில் ஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், தன்னை சி.பி.ஐ., அதிகாரி என அறிமுகம் செய்து, 'உங்கள் மகளை போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளோம். வழக்கில் இருந்து விடுவிக்க, உடனடியாக எங்கள் வங்கி கணக்கிற்கு, 50 லட்சம் ரூபாய் அனுப்ப வேண்டும்' என, கேட்டுள்ளார்.அதிர்ச்சியடைந்த அன்வர் சாதத், தன் மகளை அழைத்து பேசினார். அவர் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியதை தொடர்ந்து, எம்.எல்.ஏ., எர்ணாகுளம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.ஏற்கனவே எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர், இதுபோல மோசடி கும்பலிடம், 30 லட்சம் ரூபாயை இழந்தார். அப்போது, போலீசார் பீஹாரைச் சேர்ந்த பிரின்ஸ் பிரகாஷ் என்பவரை டில்லியில் கைது செய்தனர். தற்போது எம்.எல்.ஏ.,வையும் மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.