உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 கிலோ தங்கம் கடத்தல்; பிரபல நடிகை கைது

15 கிலோ தங்கம் கடத்தல்; பிரபல நடிகை கைது

பெங்களூரு,; ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு, விமானத்தில் 15 கிலோ தங்கம் கடத்தி வந்த பிரபல நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.கர்நாடக மாநில போலீஸ் குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக ஏ.டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ். இவரது இரண்டாவது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்தவர் ரன்யா ராவ், 34. நடிகையான இவர், தமிழில் வெளியான, வாகா படத்தில், நடிகர் விக்ரம் பிரபுவின் ஜோடியாக நடித்தார். பின், பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி நடன வீடியோக்களை பதிவிட்டு, சினிமா வாய்ப்புக்காக காத்து இருந்தார்.இந்நிலையில், ரன்யா ராவ் அடிக்கடி துபாய் சென்று வருவதாகவும், அவர் தங்கம் கடத்தலில் ஈடுபடுவதாகவும், டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.சமீபத்தில் ரன்யா ராவ் துபாய் சென்றார். அங்கிருந்து திரும்பி வரும் போது, தங்கம் கடத்தி வருகிறார் என்ற தகவல், அதிகாரிகளுக்கு கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. குடியுரிமை அதிகாரிகள் சோதனையை முடித்து ரன்யா ராவ் வெளியே வந்தபோது, அவரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கினர். அவரது உடைமைகளை சோதனைக்கு உட்படுத்தினர். இதில், அவரது பேக்கில் இருந்து, 14.80 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 12 கோடி ரூபாய். ரன்யா ராவை கைது செய்த அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதற்கு முன்பும் ரன்யா ராவ், பல முறை தங்கம் கடத்தலில் ஈடுபட்டதும், கடந்த 15 நாட்களில் நான்கு முறை துபாய் சென்று வந்ததும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை