உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண் வக்கீல் தற்கொலை; மகளிர் டி.எஸ்.பி., கைது

பெண் வக்கீல் தற்கொலை; மகளிர் டி.எஸ்.பி., கைது

பெங்களூரு; போவி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான பெண் வக்கீல் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சி.ஐ.டி., - டி.எஸ்.பி., கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியில் சமூக நலத்துறைக்கு உட்பட்ட போவி மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 34 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.இந்த வழக்கில், பெண் வக்கீலும், தொழில் முனைவோருமான ஜீவா, 34, நடத்தி வந்த நிறுவனத்திற்கு 7.16 கோடியும், அவரது சகோதரியான சங்கீதாவின் நிறுவனத்திற்கு 3.79 கோடி ரூபாயும் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டது தெரிந்தது. இதனால் ஜீவாவிடம், சி.ஐ.டி., - டி.எஸ்.பி., கனகலட்சுமி விசாரணை நடத்தினார்.கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி, பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தன் வீட்டில் ஜீவா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 11 பக்க கடிதத்தில், விசாரணை அதிகாரி கனகலட்சுமி தன்னை அரை நிர்வாணமாக்கி விசாரித்ததுடன், பாலியல் தொழில் செய்கிறாயா என்று கேட்டு மனரீதியாக தொல்லை கொடுத்தார். வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சமாக 25 லட்சம் ரூபாய் கேட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.ஜீவா தற்கொலையை அடுத்து, கனகலட்சுமிக்கு எதிராக, மாநிலம் முழுதும் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். வழக்கை சி.பி.ஐ.,யிடம் கொடுக்க வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் வக்கீல் சங்கம் சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனகலட்சுமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேட்டு, அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றி இருந்தனர்.இதையடுத்து, கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய உள்துறை உத்தரவிட்டது. அதன்படி பனசங்கரி போலீஸ் நிலையத்தில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின், வழக்கு விசாரணை, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை கனகலட்சுமி விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.இந்நிலையில், நேற்று மூன்றாவது முறை விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லவில்லை. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். ஜீவாவை துன்புறுத்தியதற்கான ஆதாரத்தின் அடிப்படையில், கனகலட்சுமி கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ganesun Iyer
மார் 13, 2025 15:38

அப்போ டாஸ்மாக் கேஸுல செந்தில் பாலாஜிக்கு முன்னாடி ஸ்டாலின் அப்பாவை விசாரிக்கலாமா?


Mecca Shivan
மார் 12, 2025 18:19

போலீஸ் முதலில் விசாரித்திருக்கவேண்டிய முதல் நபர் அப்போதைய பிஜேபி முதல்வரை


சமீபத்திய செய்தி