60 ஆண்டு திரையரங்கில் தீ பொருட்கள் எரிந்து நாசம்
தாவணகெரே: தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவின் மாலேபென்னுாரில் அமைந்துள்ளது கணேஷ் திரையரங்கு. டவுனில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு இது. கடந்த 60 ஆண்டுகளாக கன்னடத்தின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்கள் இங்கு திரையிடப்பட்டு வந்தன.காலப்போக்கில், ஓ.டி.டி., தளத்தால் திரையரங்குக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது. இதனால் சில ஆண்டுகளுக்காக இந்த திரையரங்கு மூடப்பட்டது.நேற்று முன்தினம் இரவு தீ எரிந்து கருகும் வாசனை உணர்ந்து வெளியே வந்த அக்கம் பக்கத்தினர், திரையரங்கில் இருந்து கரும்புகை வருவதை பார்த்தனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், சில மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஏனெனில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கனவே மின் இணைப்பு துண்டித்திருந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.