பெங்., அருகே புதிய ஏர்போர்ட் ஐந்து இடங்கள் தேர்வு
பெங்களூரு : பெங்களூரு அருகே, புதிய விமானம் நிலையம் கட்ட, ஐந்து இடங்களை கர்நாடக அரசு கண்டறிந்து உள்ளது.பெங்களூரு ரூரல் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு இரண்டு முனையம் உள்ளது. முதல் முனையத்தில் இருந்து உள்நாடு, இரண்டாவது முனையத்தில் இருந்து வெளிநாடு விமானம் வருகை, புறப்பாடு நடக்கிறது. இந்த விமான நிலையத்தை ஆண்டிற்கு 1.50 கோடி பயணியர் பயன்படுத்துகின்றனர்.வரும் ஆண்டுகளில் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள், பயணியர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பெங்களூரு அருகே புதிய விமானம் நிலையம் கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான இடத்தை அரசு தேடியது. இந்நிலையில் பிடதி, ஹரோஹள்ளி, குனிகல், துமகூரு, ஜிகனி என ஐந்து இடங்களை, புதிய விமான நிலையம் கட்டுவதற்கு அரசு கண்டறிந்து உள்ளது. இதில் பிடதியில் விமான நிலையம் கட்ட, அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.