மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை; முதல்வருடன் ஆலோசிக்க அமைச்சர் திட்டம்
பெங்களூரு : ''மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் 21 விதமான நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பது குறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்,'' என, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சதீஷின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:தற்போது மாநில அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு விதமான உடல் உபாதைகளுக்கு, அரசு இலவச சிகிச்சை அளிக்கிறது. சமீப நாட்களாக இவர்களுக்கு 21 விதமான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.இவற்றுக்கும் அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து, முதல்வர் சித்தராமையாவுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இவர்கள் மீது முதல்வருக்கு சிறப்பான அக்கறை உள்ளது.சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், சிறப்பு திட்டங்கள் அறிவித்துள்ளார்.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசே ஆண்டுதோறும் 250 ரூபாய் காப்பீடு கட்டுகிறது.இதனால் அவர்கள், ஒரு லட்சம் ரூபாய் வரை, மருத்துவ சிகிச்சை பெறலாம்.வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்தினால், அவர்களுக்கும் இச்சலுகை கிடைக்கும்.இவர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை, காப்பீடு சலுகை அளிக்க வேண்டும் என, உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து சரியான முடிவு எடுப்போம்.இவர்களின் நலனுக்கு, மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்கினால், உதவியாக இருக்கும்.கர்நாடகாவில் 13,00,249 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 11,850 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அரசு அனைத்து விதமான உதவியும் செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.