புதுடில்லி:டில்லியில் கடும் வெயில் சுட்டெரிப்பதால், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சம்பளத்துடன் கூடிய ஓய்வு வழங்க டில்லி துணைநிலை கவர்னர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர், இளநீர் வழங்கவும், பஸ் ஸ்டாண்டுகளில் குடிநீர் தொட்டிகள் வைக்கவும் அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டில்லி, அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. டில்லியில் வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், டில்லி அரசின் தலைமைச் செயலருக்கு, கவர்னர் சக்சேனா அனுப்பியுள்ள உத்தரவுடில்லியில் கடும் வெப்ப அலை வீசும் நிலையிலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.டில்லியில் உள்ள அனைத்து கட்டுமான தளங்களிலும் தொழிலாளர்களுக்கான மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை ஓய்வு வழங்க வேண்டும். இந்த நடைமுறையை கடந்த 20ம் தேதியில் இருந்தே டில்லி மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தியுள்ளது.டில்லியில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸுக்குக் கீழே குறையும் வரை இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். டில்லியில் வரலாறு காணாத வகையில் சில பகுதிகளில் 50 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களுக்கு தண்ணீர் மற்றும் இளநீர் வழங்க வேண்டும்.பொதுப்பணித் துறை, டில்லி குடிநீர் வாரியம், நீர்ப் பாசனத்துறை, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, டில்லி மாநகராட்சி, புதுடில்லி முனிசிபல் கவுன்சில், மின்சார துறை மற்றும் டில்லி நகர்ப்புற தங்குமிட வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகளின் கூட்டத்தை தலைமைச் செயலர் உடனடியாக கூட்ட வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களை தீவிர வெப்ப நிலையிலிருந்து பாதுகக்க தேவையான முடிவுகளை அந்தக் கூட்டத்தில் எடுக்க வேண்டும்.மேலும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் நிறுத்தங்களில் குடிநீர் பானைகள் வைக்க வேண்டும். அவற்றில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிரப்ப வேண்டும். கடும் வெயில் நேரத்தில் சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான வீடற்ற மக்களும், தெருவோர வியாபாரிகளும் நடைபாதையில் வசிக்கின்றனர். சிலநேரங்களில் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கார் கழுவினால் ரூ.2,000 அபராதம்
டில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி சிங் கூறியதாவது:டில்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஹரியானா அரசு இன்னும் விடுவிக்கவில்லை. அதனால் டில்லியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.குடிநீர் குழாய்களில் கார்களைக் கழுவினால், 2,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிய விடக்கூடாது. கட்டுமானம் மற்றும் வணிக நோக்கங்களுக்காக குடிநீர் வாரியம் வழங்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும். தண்ணீர் வீணாவதைத் தடுக்க மாநகர்ம் முழுதும் 200 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தக் குழுக்கள் இன்று காலை 8:00 மணி முதல் களத்தில் இறங்கி கண்காணிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்குவோரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். கட்டுமானத் தளங்கள் அல்லது வணிக நிறுவனங்களில் உள்ள சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வெப்பநிலை 52.3
காலையில் இருந்தே கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் டில்லியில் நேற்று மாலை மேகமூட்டம் சூழ்ந்தது. சில பகுதிகளில் லேசான தூறல் விழுந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் வெப்பநிலை மாலை 4:14 மணிக்கு அதிகபட்சமாக 52.3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.