ஜிம் உரிமையாளர் சுட்டுக் கொலை கிரேட்டர் கைலாஷில் பயங்கரம்
புதுடில்லி:தெற்கு டில்லி கிரேட்டர் கைலாஷில், உடற்பயிற்சி நிலைய உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கிரேட்டர் கைலாஷ் முதல் செக்டாரில் உடற்பயிற்சி நிலையம் நடத்துபவர் நாதிர் ஷா, 35. நேற்று முன் தினம் இரவு 10.45 மணிக்கு உடற்பயிற்சி நிலையத்துக்கு வெளியே நின்று சிலருடன் ஷா பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், ஷாவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பினர். ரத்தவெள்ளத்தில் சரிந்த நாதிர் ஷா அதே இடத்தில் உயிரிழந்தார்.தகவல் அறிந்து வந்த போலீசார், ஷா உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இருவரைக் கைது செய்துள்ளனர். இருப்பினும் முக்கியக் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக போலீசார் கூறினர்.கொலை நடந்த சில மணி நேரத்தில், தாதா ரோஹித் கோதாரா பெயரில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'சிறையில் உள்ள சமீர் பாபா உத்தரவுப்படி ஷாவை சுட்டுக் கொன்றோம். எங்கள் தொழிலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் தொழிலுக்கு இடையூறு செய்பவர்களுக்கு இதுதான் முடிவு' எனக் கூறப்பட்டு இருந்தது..சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளிகளான ரோஹித் கோதாரா, கோலி பிரார், கோகி மற்றும் கல் ராணா ஆகியோரின் பெயர்களும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தன.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் தெற்கு மண்டல துணைக் கமிஷனர் அங்கித் சவுகான் கூறுகையில், “ கொலை நடந்த இடத்தில் இருந்து சில துப்பாக்கிக் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலையாளிகள் பைக்கில் வந்து சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். அந்தக் காட்சிகள் கேமரா பதிவுகள் தெளிவாக இருக்கின்றன. ஷா உடலில் 5 இடங்களில் குண்டுகள் பாய்ந்து இருந்தன. கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரண நடந்து வருகிறது,”என்றார்.கொலை செய்யப்பட்ட ஷா மீதும் கொள்ளை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. துபாயிலும் சில தொழில்கள் செய்து வந்தார். டில்லி மாநகரப் போலீசின் உயர் அதிகாரிகள் சிலருடன் நெருக்கமாக இருந்தார். இவருடைய தந்தை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன் டில்லிக்கு வந்து இங்கேயே திருமணம் செய்து தங்கி விட்டார்.