| ADDED : மார் 06, 2025 01:44 AM
பாலக்காடு:ஆவணங்களின்றி ரயிலில் கடத்தி வந்த 18.46 லட்சம் ரூபாயை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவை பகுதியில் இருந்து, பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனுக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. கழிப்பறைக்குள் பதுங்கி இருந்த நபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அதில், உள்ளாடைக்குள் துணிப்பையில் 18.46 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.இதையடுத்து நடத்திய விசாரணையில், திருநெல்வேலி புளியங்குடி ஜின்னா நகரைச் சேர்ந்த முகமது அப்துல் ரகுமான், 28, என்பதும், வெளிநாட்டு கரன்சி வியாபாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பணத்தை எடுத்துச் செல்லும் வழியில் சிக்கி கொண்டதும் தெரிந்தது.ரயில்வே பாதுகாப்பு படையினர், பறிமுதல் செய்த பணத்துடன், தொடர் விசாரணைக்காக வருமான வரித்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர்.