உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை சம்மன்களை எதிர்த்த கெஜ்ரிவால் மனு மீது ஜூலை 11ல் விசாரணை

அமலாக்கத்துறை சம்மன்களை எதிர்த்த கெஜ்ரிவால் மனு மீது ஜூலை 11ல் விசாரணை

புதுடில்லி:கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கொள்கையை வகுத்தது.இதனால், பல தனியார் மதுபான அதிபர்கள் பலன் அடைந்ததாகவும், அதற்காக பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் டில்லி அப்போதைய துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், அக்கட்சியை சேர்ந்த விஜய் நாயர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த விவகாரத்தில் நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஒன்பது முறை சம்மன் அனுப்பியது.விசாரணைக்கு அவர் ஆஜராகாமல் இருந்தார். இதனால் மார்ச் 24ம் தேதி அவரை அமலாக்கத்துறை கைது செய்து, சிறையில் அடைத்தது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமினில் அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.நீதிபதி சுரேஷ் குமார் கைட் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு கெஜ்ரிவால் தரப்பிடம் விளக்கம் கோரப்பட்டிருந்தது.இதற்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே இரண்டு வாரங்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை