UPDATED : ஆக 27, 2024 05:16 AM | ADDED : ஆக 27, 2024 01:58 AM
ஆமதாபாத்: குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடமேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு ராஜஸ்தான் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழையும், அடுத்த இரு நாட்கள் (ஆக.26, 27 ) மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து குஜராத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மோர்பி மாவட்டம் வெள்ளகாடானது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மழை வெள்ளத்தால் பாதிப்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு முதல்வர் பூபேந்திர பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் கேர்கம் தாலுகாவில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நேற்று அதிகாலை துவங்கி மாலை வரை 8 மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தெற்கு குஜராத் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையல் அப்பகுதியின் ஆண்டு சராசரி மழையைவிட 105% அதிகமாக மழை பொழிந்துள்ளது.கனமழை காரணாமாக சர்தார் சரோவர் நர்மதா அணையின் நீர்மட்டம் 135.30 மீட்டராக உயர்ந்துள்ளது. குஜராத்தின் நீர்நிலைகள் நிரம்பியுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.