உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 சிறுமியரை வெட்டி கொன்ற வளர்ப்பு தந்தை சிக்கியது எப்படி?

2 சிறுமியரை வெட்டி கொன்ற வளர்ப்பு தந்தை சிக்கியது எப்படி?

அம்ருதஹள்ளி, : பெங்களூரில் இரண்டு மகள்களை கொலை செய்த வழக்கில், உத்தரபிரதேசத்திற்கு தப்பிச் செல்ல, ரயில் நிலையத்தில் காத்திருந்த வளர்ப்பு தந்தை மொபைல் போனால் சிக்கினார்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமித், 41. பெங்களூரு அம்ருதஹள்ளியில் தங்கி இருந்து உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, இரண்டு மகள்களுடன் தனியாக வசித்த அனிதா, 40, என்பவரை சுமித் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின் அனிதாவின் மகள்களான சோனியா, 15, திருஷ்டி, 14, ஆகியோருக்கு வளர்ப்பு தந்தையாகவும் இருந்தார். கடந்த 24ம் தேதி அனிதா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில், வீட்டில் இருந்த அவரது மகள்களை, சுமித் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 'வளர்ப்பு மகள்கள் மீது சுமித்துக்கு சந்தேகம் இருந்துள்ளது. அவர்கள் வெளியே சென்றால், எங்கு, எதற்காக, யாருடன் செல்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளார்.இதனால் சுமித்தை அனிதாவின் மகள்கள் வெறுத்ததுடன், அவர் என்ன கூறினாலும் அதை காதில் வாங்காமல் அலட்சியம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கோபத்தில் கொலை செய்தது தெரிந்தது.தலைமறைவாக இருந்த சுமித்தை அம்ருதஹள்ளி போலீசார் தேடினர். அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தன் மொபைல் போனை சுமித், 'ஆன்' செய்துள்ளார். மொபைல் போன் டவர் சிக்னலை கொண்டு, யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருக்க வேண்டுமென போலீசார் கணித்தனர். உடனடியாக யஷ்வந்த்பூர் போலீசாருக்கு, அம்ருதஹள்ளி போலீசார் தகவல் கொடுத்தனர். ரயில் நிலையம் சென்ற போலீசார், சுமித்தை கைது செய்தனர். ரயிலில் உத்தர பிரதேசம் தப்பிச் செல்ல இருந்தது தெரிந்தது. டிக்கெட் எடுப்பதற்காக மொபைல் போனை ஆன் செய்தபோது, போலீசிடம் சிக்கி உள்ளார். இரண்டு வளர்ப்பு மகள்களையும் கொலை செய்தது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி