மனைவி மீது புகார் கூறி கணவன் தற்கொலை
ஆக்ரா: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.டி., ஊழியர், மனைவியின் கொடுமை தாங்கவில்லை என கூறி வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. உ.பி.,யின் ஆக்ரா நகரில், டி.சி.எஸ்., எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தின் இன்ஜினியராக பணியாற்றியவர் மனவ் சர்மா, 30. கடந்த 24ம் தேதி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து, இரண்டு நாட்களுக்கு பின், தற்செயலாக அவரது மொபைல் போனை பார்த்த அவரின் சகோதரி, அதில் இருந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், தற்கொலை செய்து கொள்ளும் முன், கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டியபடி, மனவ் சர்மா பேசி இருந்ததாவது:ஆண்களை பற்றி கொஞ்சமாவது நினைத்து பாருங்கள்... என் மனைவிக்கும், இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளது. அதற்காக நான் என்ன செய்ய முடியும்... என் மனைவியின் கொடுமை தாங்கவில்லை. சாவதற்கு நான் அஞ்சவில்லை; நான் சாகத் தான் வேண்டும். எனினும், தயவுசெய்து, ஆண்களைப் பற்றி யோசித்து பாருங்கள். யாராவது, ஆண்களைப் பற்றி பேச வேண்டும். நான் செத்தால், எல்லா பிரச்னையும் தீர்ந்து விடும்.இவ்வாறாக பேசி, கழுத்தில் சுருக்கு கயிறை மாட்டி, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோ காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவியதை அறிந்த அவரது மனைவி நிகிதா, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:இதற்கு முன் பல முறை என் கணவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்; அப்போதெல்லாம் நான் தடுத்துள்ளேன். தற்கொலை செய்து கொண்ட நாளில், அவர் தான் என் தாய் வீட்டில் என்னை இறக்கி விட்டு சென்றார்.என்னை பற்றி அவர் கூறுவது எல்லாம் பழைய விவகாரம். நான் அவரை எந்த விதத்திலும் கொடுமைப்படுத்தவில்லை. அவர் தான், மதுவுக்கு அடிமையாகி என்னை அடித்து துன்புறுத்துவார்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதையடுத்து, நிகிதா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.