விடுமுறையால் மூணாறுக்கு பயணியர் வருகை அதிகரிப்பு
மூணாறு:கேரள மாநிலம், மூணாறில் தென்மேற்கு பருவ மழை துவங்கிய பிறகு மழைக்கான முன்னெச்சரிக்கைகள், சுற்றுலா பகுதிகளில் கட்டுப்பாடு உட்பட பல்வேறு காரணங்களால், மூன்று மாதங்களாக சுற்றுலா பயணியர் வருகை கணிசமாக குறைந்தது.இதனிடையே, வயநாட்டில் ஜூலை 30ல் கடுமையாக நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் அதிகமானோர் பலியாகினர். அதனால் மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை பயணியர் தவிர்த்ததால், மூணாறில் பயணியர் வருகை இன்றி சுற்றுலா பகுதிகள் களை இழந்தன.இந்நிலையில், கேரளாவில் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்பட்டது. கடந்த காலங்களில் ஓணப் பண்டிகையின்போது தங்கும் விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு களை கட்டும்.இந்தாண்டு அறைகள் முன்பதிவு செய்யவில்லை. இருப்பினும் ஓணம், மிலாடிநபி ஆகிய தொடர் விடுமுறையால் இரண்டு நாட்களாக சுற்றுலா பகுதிகளின் பயணியர் வருகை அதிகரித்தது.மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவை செப்., 1 முதல் செப்., 14 வரை தினசரி சராசரி 500க்கும் குறைவான பயணியர் ரசித்த நிலையில் ஓணம் நாளில் 1,100 பேர் ரசித்தனர். நேற்று முன்தின், அதன் எண்ணிக்கை மாலை வரை 1,500க்கும் அதிகமாக அதிகரித்தது.கேரளாவில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து செப்., 22 வரை விடுமுறை என்பதால் அதுவரை பயணியர் வருகை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.