உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - பாக்., ராணுவம் பேச்சு

இந்தியா - பாக்., ராணுவம் பேச்சு

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே, இந்தியா - பாக்., ராணுவ அதிகாரிகள் நேற்று பேச்சு நடத்தினர். இந்தியா - பாக்., இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும் ஒருசில சமயங்களில், பாக்., எல்லையில் இருந்து நம் ராணுவ துருப்புகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இதை பயங்கரவாதிகள் நடத்துகின்றனரா அல்லது பாக்., ராணுவத்தினர் நடத்துகின்றனரா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், பாக்., எல்லையில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதும் அதிகரித்து வருகிறது. பிப்., 11ல், ஜம்மு பிராந்தியத்தின் அக்னுார் செக்டாரில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நம் ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதே போல் பிப்.,10 மற்றும் 14ல், ரஜோரி, பூஞ்ச் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல்களில் நம் வீரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள சக்கன் -- டா - -பாக் என்ற இடத்தில், இந்தியா - பாக்., ராணுவத்தின் படைப்பிரிவு தளபதி அளவிலான பேச்சு நேற்று நடந்தது. அப்போது, இரு தரப்பினரும் எல்லையில் அமைதியைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் மற்றும் போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு நம் ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சந்திப்பு குறித்து நம் ராணுவம் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி