உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு ஆயுதத்தால் தாக்குவோம்; இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்

அணு ஆயுதத்தால் தாக்குவோம்; இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்

டெஹ்ரான் : 'இஸ்ரேல் அடக்கமாக இல்லாவிட்டால், எங்களின் அணு ஆயுத கொள்கையில் மாற்றம் செய்ய தயங்க மாட்டோம்' என ஈரான் எச்சரித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த போர் கடந்த ஆறு மாதங்களாக நீடிக்கிறது.இதற்கிடையே, இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி பயங்கரவாதிகள் 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹவுதி பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்ததை அடுத்து, சிரியாவில் உள்ள ஈரான் துாதரக அலுவலகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ உயர் அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 16 பேர் இறந்தனர். இதையடுத்து, கடந்த ஏப்ரலில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் உலக நாடுகள் மத்தியில் எழுந்தன.இந்நிலையில், ஈரான் நிர்வாக தலைவரான அயத்துல்லா அசி காமெனியின் உதவியாளரும், அந்நாட்டு அணுசக்தி ஆலோசகருமான கமல் ஹராசி, இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துஉள்ளார். ''தற்போதைய சூழலில் அணுகுண்டை தயாரிக்கும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால் ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்ற எங்கள் ராணுவ கொள்கையை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. ''இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், எங்கள் ராணுவ கொள்கையை மாற்றுவோம்,'' என, அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் -  ஈரான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், கமல் ஹராசியின் எச்சரிக்கை, உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ