வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சுண்ணாம்புக்குப்பதிலாக கணவாய் மீன்களின் பகுதிகள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பது போல தெரிகிறது.
புதுடில்லி: பதஞ்சலி நிறுவனம் விற்கும் பற்பொடியில் சைவ தயாரிப்பு என விளம்பரப்படுத்தி, அசைவ உணவான மீன் சாறு கலக்கப்படுவதால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டில்லியைச் சேர்ந்த யதின் சர்மா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:சைவப் பொருட்களை குறிக்கக்கூடிய பச்சை நிறக் குறியீட்டுடன் பதஞ்சலி நிறுவனத்தின் 'திவ்ய தன்ட் மஞ்சன்' என்ற பற்பொடி விற்பனை செய்யப்படுகிறது.என் குடும்பத்தார், இது சைவப் பொருட்களால் தயாரிக்கப்பட்டது என கருதி, இந்த பற்பொடியை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், அந்த பற்பொடியில் 'செபியா ஆபிசினாலிஸ்' என்ற பொருள் சேர்க்கப்படுவதாக தயாரிப்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.'செபியா ஆபிசினாலிஸ்' என்பது மீனிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை சாறு என தெரியவந்து உள்ளது.நாங்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அசைவ உணவு உட்கொள்வது மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. இது, எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.இது தொடர்பாக டில்லி போலீசார், மத்திய சுகாதாரத் துறை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமும் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, அசைவப் பொருளை, சைவப் பொருள் என தவறாக விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய நஷ்டஈட்டையும் பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், அந்த பற்பொடியை தயாரித்த பதஞ்சலியின் துணை நிறுவனமான திவ்ய பார்மசி, அந்நிறுவன உரிமையாளர் பாபா ராம்தேவ், மத்திய அரசு உள்ளிட்டோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கு விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சுண்ணாம்புக்குப்பதிலாக கணவாய் மீன்களின் பகுதிகள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பது போல தெரிகிறது.