23வது சட்ட கமிஷன் மத்திய அரசாணை வெளியீடு
புதுடில்லி: மத்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் 23வது சட்ட கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டு உள்ளது.மத்திய அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காக, சட்ட கமிஷன் செயல்படுகிறது. 22வது சட்ட கமிஷனின் பதவிக்காலம், ஆக., 31ம் தேதியுடன் முடிவடைந்தது.இதையடுத்து, 23வது சட்ட கமிஷன் அமைப்பதற்கான அறிவிப்பாணை வெளியிடபப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன நடவடிக்கைகள் துவங்கும்.அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:23வது சட்ட கமிஷனின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகளாக இருக்கும். உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள் இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக இருப்பர்.முழு நேர தலைவர் மற்றும் உறுப்பினர் செயலர் உட்பட, நான்கு முழு நேர உறுப்பினர்கள் அடங்கியதாக இந்த கமிஷன் இருக்கும்.சட்ட விவகாரங்கள் துறைச் செயலர் மற்றும் சட்டமைப்பு துறையின் செயலர் ஆகியோர், அலுவல் சாரா உறுப்பினர்களாக இருப்பர். இதைத் தவிர, ஐந்து பேர் பகுதிநேர உறுப்பினர்களாக இருப்பர்.கமிஷனில் இடம்பெறும் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுடைய ஓய்வு பெறும் வயது வரை அல்லது பதவிக் காலம் முடியும் வரை இந்தப் பதவியில் இருப்பர். கமிஷனில் இருக்கும் காலம், அவர்களுடைய பணிக் காலமாக கருதப்படும்.இந்தப் பிரிவைச் சாராதவர்கள், கமிஷனின் முழு நேர தலைவராக நியமிக்கப்பட்டால், மாதம், 2.50 லட்சம் ரூபாயும், உறுப்பினராக நியமிக்கப்பட்டால், மாதம் 2.25 லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளமாக வழங்கப்படும்.ஓய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்ட ஓய்வு பெற்றோர் நியமிக்கப்பட்டால், அவர்களுடைய ஓய்வூதியம் உள்ளிட்டவை சேர்த்து, தலைவர் பதவிக்கு. 2.50 லட்சம் ரூபாயும், உறுப்பினர் பதவிக்கு, 2.25 லட்சம் ரூபாயும் மாதம் கிடைக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பதவிக் காலம் முடிந்த, 22வது சட்ட கமிஷன், யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவை தொடர்பான தன் அறிக்கைகளை தாக்கல் செய்தது.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கை மீதான தன் பரிந்துரையையும் சட்ட கமிஷன் இறுதி செய்திருந்தது.ஆனால், தலைவராக இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, முன்னதாக லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனால், இந்த விவகாரத்தில் தலைவர் இல்லாமல், சட்ட கமிஷன் தன் அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை.