ஏழாம் வகுப்பு முதல் எம்.எஸ்., பொது மருத்துவம் வரையிலான கல்வி தகுதி கொண்ட வேட்பாளர்கள், கலபுரகி லோக்சபா தொகுதியில் களத்தில் உள்ளனர்.நமது நாட்டில் அரசியலுக்கு வரவோ, தேர்தலில் போட்டியிடவோ கல்வி தகுதி தடையாக இருப்பதில்லை. ஜனநாயகத்தில் ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர் என, யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட நமது நாட்டின் அரசியல் சாசனம் வாய்ப்பளிக்கிறது. இதன் பயனாக படித்தவர்களும், படிக்காதவர்களும் போட்டியிடுகின்றனர்.இம்முறை லோக்சபா தேர்தலில் கலபுரகி தொகுதியில் ஏழாம் வகுப்பு முதல், எம்.எஸ்., பொது மருத்துவம் படித்தவர் வரை களமிறங்கி உள்ளனர். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ள, பிரமாண பத்திரத்தில் தங்களின் வயது, கல்வி தகுதி, வருவாய், தொழில் என, தங்களின் தனிப்பட்ட விபரங்களை விவரித்துள்ளனர். 14 வேட்பாளர்கள்
கலபுரகி எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. இங்கு அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பா.ஜ., வேட்பாளர் உமேஷ் ஜாதவ், அதிகம் படித்த வேட்பாளர். பெங்களூரு மருத்துவ கல்லுாரியில் 1993ல் எம்.எஸ்., பொது மருத்துவம் முடித்தார்.பாரதிய பஹுஜன கிராந்தி தளம் கட்சி வேட்பாளர் ராஜ்குமார் கோபிநாத், ஏழாம் வகுப்பு படித்தவர். இவர் மிகவும் குறைந்த கல்வி தகுதி கொண்ட வேட்பாளர் ஆவார். சிமென்ட் விற்பனையுடன், விவசாயமும் செய்வதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.சமூக கர்நாடக ராஷ்ட்டிர சமிதி கட்சியின் கோவிந்த் ஜாதவ், எட்டாம் வகுப்பு படித்தவர். சமூக சேவை செய்வதாகவும், இதுவே தன் வருவாய்க்கு வழி என்றும் கூறியுள்ளார். பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிடும் ஹுச்சப்பா பசப்பா, எஸ்.யு.சி.ஐ., கட்சியின் ஷர்மா, சுயேச்சைகள் ஆனந்த சித்தண்ணா, தாராபாய் விஸ்வேஸ்வரய்யா போவி பி.ஏ., முடித்துள்ளனர். கணவன் - மனைவி
சுயேச்சைகள் ரமேஷ் பீம்சிங் சவுஹான், அவரது மனைவி ஜோதி, சுந்தர் மேகு எம்.ஏ., முதுகலை பட்டப்படிப்பு பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ராதா கிருஷ்ணா தொட்டமனி உட்பட மூன்று வேட்பாளர்கள் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளனர். ஒருவர் பி.யு.சி., படித்துள்ளார்.இதே தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் விஜயகுமார் பீமஷா, ஐ.டி.ஐ., டிப்ளமோ முடித்து கூலி வேலை செய்வதாக அறிவித்துள்ளார்.- நமது நிருபர் -