காஜூரு கர்ணா யானை குண்டு பாய்ந்து அவதி
குடகு : காட்டு யானை, 'காஜூரு கர்ணா'வை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடலில் குண்டு பாய்ந்ததில், சீழ் பிடித்து அவதிப்படுகிறது.குடகு, மடிகேரி பகுதிகளில் ஒற்றை காட்டு யானை, ஒன்றரை ஆண்டாக அட்டகாசம் செய்து வருகிறது. பொது மக்களுக்கு, விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்தது. தோட்டங்கள், எஸ்டேட்களில் நுழைந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அழித்தது. நடமாடும் போது எதிரே வந்து மக்களை அச்சுறுத்தியது. இந்த யானைக்கு, 'காஜூரு கர்ணா' என, பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.தங்களுக்கு தொல்லை கொடுக்கும் யானையை பிடிக்கும்படி, வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர். வனத்துறையினரும் சில மாதங்களுக்கு முன், வளர்ப்பு யானைகளின் உதவியுடன், காஜூரு கர்ணாவை பிடித்தனர். காஜூரு கிராமத்தில் கராலில் அடைத்து பழக்கி வந்தனர். சில நாட்களுக்கு முன், மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் யானையின் உடலில் குண்டு பாய்ந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை.யானை வலியால் துடிப்பதை கண்ட வனத்துறை அதிகாரிகள், கால்நடை டாக்டரை வரவழைத்து ஆய்வு செய்த போது யானை உடலில் குண்டு பாய்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டை வெளியே எடுத்துவிட்டு, சிகிச்சை அளிக்கின்றனர். காயத்தில் சீழ் பிடித்துள்ளதால் வலியால் அவதிப்படுகிறது.