உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., கவுன்சிலர் கடத்தல்: காங்கிரசார் மீது புகார்

பா.ஜ., கவுன்சிலர் கடத்தல்: காங்கிரசார் மீது புகார்

பெலகாவி:கித்துார் டவுன் பஞ்சாயத்து தலைவர் தேர்தல், செப்., 3ம் தேதி நடக்க உள்ள நிலையில், பா.ஜ., கவுன்சிலர் கடத்தப்பட்டார்.கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளில், தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல்கள் நடந்து வருகின்றன. பலர் கட்சி தாவி, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஓட்டுப் போடுகின்றனர்.சில நாட்களுக்கு முன்பு, ஷிவமொகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி டவுன் பஞ்சாயத்தில், எதிர்க்கட்சிகளை இழுக்க பா.ஜ., முயற்சிக்கும் என்ற அச்சத்தில், காங்கிரஸ் கவுன்சிலர்கள் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.பெலகாவி மாவட்டம், கித்துார் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 18 இடங்கள் உள்ளன. இதில், பா.ஜ. 9; காங்., 5; சுயேச்சைகள் 4 உள்ளனர். டவுன் பஞ்சாயத்தின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் செப்., 3ம் தேதி நடக்கிறது. பா.ஜ.,வும், சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரசும் சம பலத்துடன் உள்ளன.இந்நிலையில், பா.ஜ., கவுன்சிலர் நாகராஜ், நேற்று முன்தினம் இரவு சவுகிமத் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, ஸ்கார்பியோ காரில் வந்த சிலர், நாகராஜை, வலுக்கட்டாயமாக இழுத்து காரில் கடத்திச் சென்றனர்.இதை பார்த்த அப்பகுதியினர், அதிர்ச்சியடைந்து, கித்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பா.ஜ.,வினர், நாகராஜை, காங்கிரஸ் கவுன்சிலர்கள் அசோக் மால்கி, பசவராஜ் சங்கொல்லி, சுரேஷ் கடேமணி ஆகியோர் கடத்திச் சென்றதாக புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாகராஜின் தந்தை பசவராஜும், போலீசில் புகார் அளித்துள்ளார்.மாவட்ட எஸ்.பி., பீமா சங்கர் குலேடா கூறுகையில், ''பா.ஜ., கவுன்சிலரை கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ