உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீடியோ காலில் பேசியதால் கொன்றேன்: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

வீடியோ காலில் பேசியதால் கொன்றேன்: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

கெங்கேரி:வேறு ஒருவருடன் வீடியோ காலில் பேசியதால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கொன்றதாக கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மாண்டியாவை சேர்ந்தவர் நவ்யா, 24. கன்னட திரை உலகில் நடன கலைஞராக பணியாற்றினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சிக்கபல்லாப்பூரை சேர்ந்த வாடகை கார் டிரைவர் கிரண், 27, என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின், பெங்களூரு கெங்கேரி விஸ்வேஸ்வரய்யா லே - அவுட்டில் வசித்தனர். மூன்று மாதங்களாக இருவருக்கும் இடையில், தகராறு ஏற்பட்டது.இதனால், கிரணை பிரிந்த நவ்யா, திரையுலகை சேர்ந்த தனது தோழி ஐஸ்வர்யா என்பவருடன், வாடகை வீட்டில் வசித்தார். கடந்த 28ம் தேதி, நவ்யாவை கழுத்தை அறுத்து கிரண் கொலை செய்தார். அவரை கெங்கேரி போலீசார் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலம்:நானும், நவ்யாவும் காதலித்து திருமணம் செய்தோம். அவருக்கு கன்னட திரை உலகில் பலருடன் பழக்கம் இருந்தது. எந்த நேரம் பார்த்தாலும், மொபைல் போனில் யாரிடமாவது பேசிக் கொண்டே இருந்தார். அவரை கண்டித்தேன்.

போதையில் தோழி

மூன்று மாதங்களுக்கு முன்பு, என்னை பிரிந்து தோழி ஐஸ்வர்யாவுடன் வசித்தார். அவரை சமாதானப்படுத்தி, எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றேன். அவர் பிடிகொடுக்கவில்லை.கடந்த 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு, கள்ளச்சாவியை பயன்படுத்தி நவ்யா வசித்த வீட்டின் கதவை திறந்தேன். படுக்கை அறையில் ஒளிந்து கொண்டேன். இரவு 11:00 மணிக்கு நவ்யாவும், அவரது தோழி ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு வந்தனர். போதையில் இருந்த ஐஸ்வர்யா, படுக்கை அறைக்கு வந்ததும் துாங்கி விட்டார்.நவ்யா யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசினார். அவர் அருகே சென்று, யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டேன். என்னிடம் தகராறு செய்தார்.

உணவே விஷம்

சமையல் அறைக்கு சென்று, கத்தியை எடுத்து வந்தார். 'உனக்கும், எனக்கும் சரிப்பட்டு வராது. ஒழுங்காக என்னை பிரிந்து விடு. இல்லாவிட்டால் கத்தியால் குத்தி விடுவேன்' என்று என்னை மிரட்டினார். இதனால், அங்கிருந்து புறப்பட்டேன்.படுக்கை அறைக்குச் சென்ற நவ்யா, கத்தியை தலையணைக்கு அடியில் வைத்தார். அவரை தொடர்ந்து படுக்கை அறைக்குச் சென்று, அவரிடம் மீண்டும் தகராறு செய்தேன். போதையில் துாங்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யா எழுந்திருக்கவில்லை.தகராறு முற்றியதால் தலையணைக்கு அடியில் இருந்த கத்தியை எடுத்து நவ்யா கழுத்தை அறுத்து கொன்றேன். பின், வீட்டின் கழிப்பறைக்கு சென்று, பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றேன்.நான் ஏன் சாக வேண்டும் என்று தோன்றியது. வீட்டில் இருந்து புறப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். உணவே விஷமாக மாறியதாக கூறி சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கிரண் கூறி உள்ளார்.நவ்யாவை காதலித்தபோது தன்னை வாடகை கார் டிரைவர் என, கிரண் கூறவில்லை. விலை உயர்ந்த கார்கள் முன் நின்று, புகைப்படம் எடுத்து நவ்யாவை ஏமாற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் நவ்யாவுக்கு இதுபற்றி தெரிந்தது. ஆனாலும் கிரண் மீதான காதலால், அவரை திருமணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ