உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோஷ்டி மோதலால் தலைமை அதிருப்தி கோலாருக்கு கிட்டாத அமைச்சர் பதவி

கோஷ்டி மோதலால் தலைமை அதிருப்தி கோலாருக்கு கிட்டாத அமைச்சர் பதவி

-கோஷ்டி மோதலால் கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., க்களில் யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் நான்கு இடங்களில் வெற்றி பெற்றது.பங்கார்பேட் நாராயணசாமி மூன்றாவது முறையும், ரூபகலா, நஞ்சேகவுடா, கொத்தூர் மஞ்சுநாத் தலா இரண்டாவது முறையும் வெற்றி பெற்றனர். மூத்த எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் நாராயணசாமிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பைரதி சுரேஷ்

ஆனால் கோலார் மாவட்டத்திலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. மாவட்ட பொறுப்பு அமைச்சராக, கர்நாடக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் நியமிக்கப்பட்டார்.பெங்களூருக்கு மிக அருகிலுள்ள மாவட்டமாக கோலார் இருந்தாலும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் கோலார் பக்கமே செல்வது இல்லை.இதனால் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். மாவட்ட பொறுப்பு அமைச்சரை மாற்றுங்கள்; இல்லாவிட்டால் எங்களில் யாருக்காவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று நான்கு எம்.எல்.ஏ.,க்களும் கோரிக்கை விடுத்தனர்.

முதல்வருக்கு கடிதம்

ஆனால் இந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இடையிலும் ஒற்றுமை இல்லை. இரண்டு கோஷ்டியாக பிரிந்து உள்ளனர். கொத்துார் மஞ்சுநாத், நஞ்சேகவுடா ஒரு பிரிவாகவும்; நாராயணசாமி, ரூபகலா ஒரு பிரிவாகவும் உள்ளனர். இரண்டு பிரிவினரும் ஒருவர் மீது ஒருவர் குறைகளை சொல்லி வருகின்றனர்.இந்நிலையில், கோலார் -சிக்கபல்லாபூர் மாவட்ட பால் கூட்டுறவு சங்கத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகவும்; கூட்டுறவு சங்க வாகனங்களுக்கு டீசல் போடுவதற்கு மட்டும் ஐந்தாண்டுகளில் 240 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு இருப்பதாகவும், சமீபத்தில் நாராயணசாமி குற்றச்சாட்டு கூறினார்.இது தொடர்பாக முதல்வருக்கும் கடிதம் எழுதுவதாக அறிவித்தார். அந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருப்பவர் நஞ்சேகவுடா. நாராயணசாமியின் இந்த குற்றச்சாட்டின் மூலம் இருவருக்கும் இடையிலான மோதல் மேலும் அதிகரித்து உள்ளது.

நீயா, நானா?

நிலைமை இப்படி இருக்கும்போது, இருதரப்பில் யாராவது ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் சிக்கல் ஏற்படும் என்பதை, மேலிடம் நன்கு உணர்ந்து உள்ளது. இதனால் நான்கு பேருக்குமே அமைச்சர் பதவி கொடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டு உள்ளது.கர்நாடகாவின் முதல் முதல் மந்திரியாக இருந்த கே.சி.ரெட்டி கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர். தங்க வயலில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் உள்ள கேசம்பள்ளி அவரது சொந்த கிராமம்.ஆனாலும் கோலார் அரசியலில் கோஷ்டி பூசலுக்கு எந்த பஞ்சமும் இல்லை. இப்போது அமைச்சராக இருக்கும் முனியப்பா, முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் இடையில் பல ஆண்டுகளாக நீயா, நானா போட்டி ஏற்பட்டது.கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனது மருமகன் சிக்க பெத்தப்பாவுக்கு சீட் வாங்கிக் கொடுக்க முனியப்பா எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், ரமேஷ் குமார் தரப்பு விடவே இல்லை.வேறு வழியின்றி பெங்களூரு முன்னாள் மேயர் கவுதம் என்பவரை வேட்பாளராக மேலிடம் அறிவித்தது. ஆனால் அவரும் தேர்தலில் தோற்று போனார்.பின், முனியப்பா, ரமேஷ் குமார் இடையிலான மோதல் சற்று ஓய்ந்த நிலையில், தற்போது எம்.எல்.ஏ.,க்கள் இடையில் மோதல் ஏற்பட்டிருப்பது கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. - -நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை