விஜயபுரா: அமைச்சர் எம்.பி.,பாட்டீலை சுற்றி, நில மாபியா கும்பல் இருப்பதாக, பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றம் சாட்டியுள்ளதர்.விஜயபுரா பா.ஜ., -- எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் நேற்று அளித்த பேட்டி:தொழில் துறை அமைச்சர் எம்.பி., பாட்டீலை சுற்றி நில மாபியா கும்பல் உள்ளது. அந்த கும்பல் போலி ஆவணங்களை உருவாக்கி, விஜயபுரா மக்களின் சொத்துக்களை அபகரித்து வருகிறது.இதனால் மக்கள் மாதம் ஒருமுறை, நில அளவையர் அலுவலகத்திற்கு சென்று தங்கள் நிலம் யார் பெயரில் உள்ளது என்று சரி பார்க்க வேண்டும். போலி ஆவணங்கள் உருவாக்கி, நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுபவர்கள் மீது அமைச்சர் எம்.பி., பாட்டீல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை. விஜயபுரா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அரசு மீது கோபத்தில் உள்ளனர். இன்னும் மூன்று மாதங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு நிதி கேட்டு பிரச்னை செய்வர். இதனால் இந்த அரசு கவிழ்ந்துவிடும்.பொருளாதார நிபுணர் என்ற தன்னை கூறிக்கொள்ளும், முதல்வர் சித்தராமையாவால் தற்போது எதுவும் செய்ய முடியவில்லை. அரசு திவால் ஆகிவிடும். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.மாநிலத்தில் சட்டம் --ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தன் துறையை நிர்வகிப்பதில், முழுமையாக தோல்வி அடைந்து விட்டார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில் விஜயபுரா தொகுதியில் பா.ஜ., வேட்பாளருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ராஜு அல்கூர் விஜயபுராவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைத்துள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில், தலித் சமூக ஓட்டுகள் எனக்கு முழுமையாக கிடைத்தது. ஆனால் லோக்சபா தேர்தலில் தலித் சமூக ஓட்டுகள் பிரிந்துள்ளது.சட்டசபை தேர்தலின் போது வெளியூர்களில் வசிப்பவர்கள் வந்து ஓட்டு போட்டனர். ஆனால் லோக்சபா தேர்தலில் ஓட்டு போட பெரும்பாலானோர் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.