லிப்ட் கேபிள் அறுந்து வடமாநில இளைஞர் பலி
உத்தரகன்னடா: கட்டடம் ஒன்றில், லிப்ட் கேபிள் அறுந்து விழுந்ததில், இளைஞர் பலியானார்.ராஜஸ்தானின் ஜோத்புரை சேர்ந்தவர் கோபால் சிங், 25. இவர் உத்தரகன்னடா கார்வாரில் வசிக்கிறார். கார்வாரின், சுபாஷ் ரோட்டில் ஜெகதாம்பா எலக்ட்ரிகல்ஸ் கட்டடம் உள்ளது. சில ஆண்டுகளாக இந்த கடையில் வேலை செய்கிறார். இவர் கடை உரிமையாளர் நரேந்திர சிங் ராத்தோட், 34, என்பவரின் உறவினர்.நேற்று காலை கோபால் சிங், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வர, மாடிக்கு சென்றார். பொருட்களை லிப்டில் வைத்து, கீழே வந்து கொண்டிருந்தார். அப்போது லிப்ட் கேபிள் திடீரென அறுந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கோபால் சிங், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.லிப்ட் பணிகள் இன்னும் முடியவில்லை. அரை, குறையாக இருந்த லிப்டில் சென்று, பொருட்களை கொண்டு வரும்படி உரிமையாளர் கூறியதே, அசம்பாவிதத்துக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.கடை உரிமையாளர் நரேந்திர சிங் ராத்தோட், 34, இவரது தம்பி லட்சுமண் சிங் ராத்தோட், 29, மீது குமட்டா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.