முதியவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை; கே.ஆர்., அரசு மருத்துவமனை சாதனை
மைசூரு ; கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 72 வயது முதியவருக்கு, கே.ஆர்., அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரை காப்பாற்றி உள்ளனர்.மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டை சேர்ந்த 72 வயது முதியவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், மைசூரு கே.ஆர்., அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, அறுவை சிகிச்சை டாக்டர் நவீன் கவுடா கூறியதாவது:பொதுவாக 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யும்போது, ரத்தப்போக்கு அதிகரிக்கும். அதை கட்டுப்படுத்த சி.யு.எஸ்.ஏ., எனும் காவிட்ரான் அல்ட்ராசானிக் சர்ஜிக்கல் ஆஸ்பிரேட்டர் உள்ளிட்ட உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் தேவை.இந்த கருவி கே.ஆர்., அரசு மருத்துவமனையில் இல்லை என்றாலும், எங்கள் டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இரண்டு வாரங்களுக்கு பின், அவர் குணமடைந்து விடுவார். அரசு மருத்துவமனை என்ற தாழ்வு மனப்பான்மையை விட்டு, விட்டு கே.ஆர்., மருத்துவமனைக்கு வர வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.என்னை பொறுத்தவரை, மருத்துவர்கள் உண்மையில் கடவுள் போன்று உள்ளனர். என் வயதுக்கு ஏற்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தேன். இந்த பயங்கரமான புற்றுநோய், என்னை தொந்தரவு செய்தது. எனினும், மருத்துவர்களின்கடின உழைப்பால்,என் உயிர் தப்பியது. அவர்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.- சிகிச்சை பெற்ற முதியவர்