உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் ஆதரவாளர் பெயர்; மஹாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

கொலை வழக்கில் ஆதரவாளர் பெயர்; மஹாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா

மும்பை; பஞ்சாயத்து தலைவர் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தன் நெருங்கிய ஆதரவாளர் சிக்கியதைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே பதவியில் இருந்து விலகினார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

சித்ரவதை

இங்குள்ள பீட் மாவட்டம் மாசாஜோக் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக், கடந்தாண்டு டிச., 9ல் கொல்லப்பட்டார்.பீட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து, சிலர் மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதை தடுத்ததால் சந்தோஷ் தேஷ்முக், கடத்திச் செல்லப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த சி.ஐ.டி., எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவு, கடந்த மாதம், 27ம் தேதி 1,200 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில், வால்மிக் கராட் உட்பட ஏழு பேர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. கொலை சம்பவம் நடந்த பின், இதில் வால்மிக் கராட்டுக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன.தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் தனஞ்சய் முண்டேவுக்கு மிகவும் நெருக்கமானவர் வால்மிக் கராட். இந்த கொலை வழக்கு தொடர்பாக, புகைப்படங்கள் மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பான தகவல்கள், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாயின. இதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்து தனஞ்சய் விலக கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான அஜித் பவார் மற்றும் அக்கட்சி மூத்த தலைவர்களுடன், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக, தனஞ்சய் முண்டே நேற்று அறிவித்தார்.'என் மனசாட்சி கூறியபடி இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. போதிய ஓய்வு எடுத்து சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், மருத்துவ காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகியுள்ளேன்' என, ராஜினாமா கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

'தாமதமான நடவடிக்கை'

சிவசேனா உத்தவ் பிரிவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளதாவது:பஞ்சாயத்து தலைவர் கொலை நடந்த, 24 மணி நேரத்துக்குள் தனஞ்சய் முண்டேவின் ராஜினாமாவை முதல்வர் கோரியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், நீதி வென்றதாக கருதலாம். ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !