உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமஸ்கிருதம் மட்டுமே பேசும் மத்துாரு குக்கிராமம்

சமஸ்கிருதம் மட்டுமே பேசும் மத்துாரு குக்கிராமம்

ஒரு காலத்தில் அக்ரஹாரா பகுதிகளில், சமஸ்கிருதம் தான் அதிகமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போது மற்ற மொழிகள் கலந்து பேசுகின்றனர். சிலர் மட்டுமே சமஸ்கிருதத்தில் பேசுகின்றனர். இதுவும் அரிது என்றே சொல்லலாம்.ஷிவமொகா நகரில் இருந்து, 4 கி.மீ., துாரத்தில் உள்ள மத்துாரு கிராமத்தில் உள்ள மக்கள் இன்றளவும் சமஸ்கிருதம் மட்டுமே பேசுகின்றனர். அன்றாட பயன்பாட்டில் சர்வ சாதாரணமாக பேசி வருகின்றனர்.இந்த கிராமத்தில், ராமர், சிவன், லட்சுமி கேசவர், சோமேஸ்வரா ஆகிய நான்கு கோவில்கள் அமைந்துள்ளன. மத்துாரு - ஹொசஹள்ளி என்ற இரண்டு குக்கிராமங்களில் தினமும் மக்கள் சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், இவ்விரண்டு கிராமங்களையும் ஒன்றாகவே கருதுவர்.இப்பகுதியில் உள்ள 5,000க்கும் மேற்பட்டோருக்கு சமஸ்கிருதத்தை பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். வேதங்களை ஆராய்ச்சி செய்வது மத்துாரின் மற்றொரு சிறப்பு. வேதங்களை கற்பிக்க, வேதாந்த பள்ளியும் உள்ளது.

சமஸ்கிருதம்

துங்கா ஆற்றங்கரையில் மத்துாரு கிராமம் இருப்பதால், சில மக்கள் ஆற்றில் குளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். பாரம்பரிய முறைப்படி சமஸ்கிருதம் இன்றளவும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.இந்த கிராமத்தில் பிறந்து மறைந்த எழுத்தாளரும், பாரதிய வித்யா பவனின் முன்னாள் இயக்குனருமான மத்துாரு கிருஷ்ணமூர்த்தி, வேதம் மற்றும் உபநிடதங்கள் குறித்து பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டவர். இலக்கியத்துக்காக இவருக்கு, 2009ல் மத்திய அரசு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.தொல்லியல் துறைக்கு கிடைத்த செப்பு தகடில் குறிப்பிட்டுள்ள படி, 1512ல் விஜயநகர பேரரசரால் மத்துாரு மற்றும் ஹொசஹள்ளி ஆகிய கிராமங்களை, அப்பகுதி மக்களுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளன.உடுப்பி பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்த, மறைந்த விஸ்வேச தீர்த்த சுவாமிகள், 1982ல் மத்துார் கிராமத்துக்கு விஜயம் செய்து, சமஸ்கிருத கிராமம் என்று பெயரிட்டார். கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், சமஸ்கிருதம் கற்பித்து வருபவர்களில், 30க்கும் அதிகமான சமஸ்கிருத பேராசிரியர்களை வழங்கிய கிராமம் மத்துாரு.

பாரம்பரிய உணர்வு

இந்த கிராமம் தான், இந்தியாவில் சமஸ்கிருதத்தை அன்றாட பயன்பாட்டில் உள்ள கடைசி கிராமம் என்று சொல்லப்படுகிறது. இப்போதும் குருகுல கல்வி மூலம், சமஸ்கிருதம் சொல்லி கொடுக்கப்படுகிறது. கிராமத்துக்குள் நுழையும் போதே, கலாச்சாரம், பாரம்பரிய உணர்வு ஏற்படும் வகையில், மக்களின் செயல்பாடு, பேச்சு இருக்கும். வெளி ஆட்களிடம் மட்டுமே கன்னட மொழியில் பேசுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை