மெட்ரோ சேவை நிறுத்தம் : ஆட்டோ கட்டணம் உயர்வு
பெங்களூரு:சிக்னல் தொடர்பான பணிகள் நடந்ததால், நாகசந்திரா - பீன்யா தொழிற்பேட்டை இடையே நேற்று நாள் முழுதும், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பயணியர் கடும் அவதி அடைந்தனர். அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் சென்றனர்.பெங்களூரு நாகசந்திராவில் இருந்து சில்க் இன்ஸ்டிடியூட் வரை, பசுமை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.சிக்னல் தொடர்பான பணிகளால், நாகசந்திரா - பீன்யா தொழிற்பேட்டை இடையே, நேற்று நாள் முழுதும், மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.இதனால் பீன்யா தொழிற்பேட்டை - சில்க் இன்ஸ்டிடியூட் வரை மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில் சேவை நிறுத்தப்பட்ட, இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் தாசரஹள்ளி, ஜாலஹள்ளி ரயில் நிலையங்கள் உள்ளன.பீன்யா தொழிற்பேட்டையுடன் ரயில் நிறுத்தப்பட்டதால், நாகசந்திரா வரை செல்லும் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர். பீன்யா தொழிற்பேட்டையில் இறங்கி அங்கிருந்து வாடகை கார்கள், ஆட்டோக்களில் சென்றனர். ரயில் ஓடாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, வாடகை, ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.'பராமரிப்புப் பணிகளுக்கு ரயில் சேவை நிறுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கு ஏற்ப பயணியருக்கு மாற்று வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும்' என, மெட்ரோ பயணியர் கூறினர்.