கைது வாரன்டுக்கு பயந்து நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்
பெங்களூரு : கர்நாடக சட்டசபைக்கு 2013ல் நடந்த தேர்தலில், தங்கவயல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சங்கர் என்பவர் போட்டியிட்டார்.தேர்தல் நேரத்தில் சங்கருக்கும், அப்போது கோலார் காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த, மாநில உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.தன்னை தாக்கியதாக, ராபர்ட்சன்பேட் போலீசில் சங்கர் அளித்த புகாரின்பேரில் முனியப்பா மீது வழக்குப் பதிவானது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், முனியப்பா மீது தவறு இல்லை 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர்.இதை எதிர்த்து சங்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பி' அறிக்கையை ரத்து செய்தது. மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், சிறப்பு நீதிமன்றத்தில் முனியப்பா ஆஜராகவில்லை. நேற்று காலை விசாரணை நடந்தது. அப்போதும் முனியப்பா வரவில்லை.கோபம் அடைந்த நீதிபதி சந்தோஷ் கஜான பட், “மாலைக்குள், பிரதிவாதி ஆஜராகாவிட்டால், அவருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்படும்,” என எச்சரித்தார்.இதையடுத்து தன் வக்கீலுடன் நேற்று மதியம், நீதிமன்றத்தில் முனியப்பா ஆஜர் ஆனார். “ஜாமின் வழங்க வேண்டும்,” என, அவர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.