உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்களுக்கு கெடு
பெங்களூரு,: “உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, நிர்ணயித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்,” என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி உத்தரவிட்டார்.நேற்று காலை மேல்சபை கூடியதும், ம.ஜ.த., உறுப்பினர் சரவணா கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதில் வேண்டினார்.மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: உங்கள் கேள்வி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் அரசு பதில் அளிக்கும்.சரவணா: நான் எழுப்பிய மூன்று கேள்விகளும், நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது இதே போன்று நடந்தால், நாங்கள் ஏன் சபைக்கு வர வேண்டும்? கேள்விகளை எதற்காக கேட்க வேண்டும்; அரசுக்கு பதிலளிக்க முடியாதா?அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா: உறுப்பினரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துணை கேள்வியில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலங்களின் இன்றைய மார்க்கெட் மதிப்பு குறித்து விபரங்களை கேட்டுள்ளார். இந்த விபரங்களை தெரிவிக்க, அவகாசம் வேண்டும். எனவே நேரம் கேட்டுள்ளோம்.சரவணா: இம்முறை கூட்டத்தொடர் துவங்கியபோது, மூன்று கேள்விகளை கேட்டிருந்தேன். மூன்று கேள்விகளுக்கும், இதே போன்ற பதிலையே அரசு அளித்துள்ளது. கேள்வி கேட்பது உறுப்பினர்களின் உரிமை. அரசு பதில் அளிக்காமல், நழுவுகிறதா அல்லது பதில் இல்லையா?அமைச்சர் போசராஜு: அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க, அரசு தயாராக உள்ளது. ஆனால் துணை கேள்வியில், கூடுதல் விபரங்களை அளிக்க வேண்டியுள்ளதால், அமைச்சர் அவகாசம் கேட்டுள்ளார்.ம.ஜ.த., - போஜேகவுடா: இது சரவணா ஒருவரின் பிரச்னை மட்டும் அல்ல. இந்த அரசு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, பதில் அளிப்பது இல்லை. கேள்வி எழுப்புவது ஒவ்வொருவரின் கடமை. அரசு இப்படி நடந்து கொண்டால், சபைக்கு நாங்கள் எதற்காக வர வேண்டும்?பசவராஜ் ஹொரட்டி: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அரசு பதில் அளிக்க வேண்டும். அவ்வப்போது அவகாசம் கேட்பது சரியல்ல.இதற்கு முன்பு 15 நாட்களில் பதில் அளிக்கும்படி, நான் உத்தரவிட்டேன். ஆனால் ஒரு வாரத்துக்குள், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்.