உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் கணக்கில் ரூ.3.5 லட்சம் கோடி; திருப்தி அளிப்பதாக மோடி பேச்சு

விவசாயிகள் கணக்கில் ரூ.3.5 லட்சம் கோடி; திருப்தி அளிப்பதாக மோடி பேச்சு

பாகல்பூர் : ''விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இது, தனிப்பட்ட முறையில் எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிக்கும் விஷயமாக உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.பிரதமர் விவசாயிகள் கவுரவ நிதித் திட்டம் என்ற பெயரில், நாடு முழுதும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இது, ஆண்டில் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.கடந்த 2019, பிப்., 24ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, 11 கோடி விவசாய குடும்பங்களுக்கு, 3.46 லட்சம் கோடி ரூபாய், 18 தவணைகளில் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 19வது தவணையாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தும் நிகழ்ச்சி பீஹாரின் பாகல்பூரில் நேற்று நடந்தது.இதில், பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும், பிரதமர் மோடி பேசியதாவது:விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சிறந்த முன்முயற்சியான இந்த திட்டம் ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்குகளில் இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாய் சேர்ந்திருப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு அபரிமிதமான திருப்தியையும், பெருமையையும் அளிப்பதாக உள்ளது. எங்களின் இந்த முயற்சி, விவசாயிகளுக்கு மதிப்பு, வளம், புதிய பலம் ஆகியவற்றை அளிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில், ''இதுவரை எந்த அரசுகளும் செய்யாத ஒன்றை பிரதமர் மோடி செய்துள்ளார். விவசாயிகளின் வலியை உணர்ந்துள்ள அவர், விவசாயிகளுக்கு வழங்கியுள்ள பரிசு தான் இந்த திட்டம்,'' என்றார்.பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்., - நவம்பரில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பீஹாரில் பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். மேடையில் நிதிஷ் குமாருடன் அவர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

மாணவர்களுக்காக தாமதம்!

மத்திய பிரதேசத்தின் போபாலில் சர்வதேச முதலீட்டு மாநாடு நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். நான் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்படும் நேரத்தில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நடப்பது நினைவுக்கு வந்தது. என் வாகனங்களால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்று தோன்றியது. அதனால், சற்று தாமதமாக புறப்பட்டு வந்தேன்.இவ்வாறு அவர் பேசினார்.

லாலுவுக்கு கண்டனம்!

பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவை விமர்சித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், அவருடைய பெயரை குறிப்பிடாமல் மோடி பேசியதாவது:ஹிந்து மதம் குறித்தும், கும்பமேளா குறித்தும் விமர்சித்து சிலர் பேசியுள்ளனர். காட்டாட்சி நடத்திய அவர்களை, பீஹார் மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பீஹாரில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !