கொப்பால் : கணவரை பிரிந்த பெண், அவரது மகன், தாய் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.கொப்பால் மாவட்டம், ஹொஸ்லிங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராஜேஸ்வரி, 50. இவருக்கு இரு மகள்கள். ஒரு மகள் வசந்தா, 28, இவரது 5 வயது மகன் சாய் தர்மதேஜ்.வசந்தாவுக்கும், ஆந்திர மாநிலம், நந்தியாலா கிராமத்தைச் சேர்ந்தவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்னை காரணமாக, கணவரை விட்டுப் பிரிந்த வசந்தா, தனது மகனுடன், தாய் வீட்டில் வசித்து வந்தார். 'நியூ சிங்கப்பூர்' என்ற பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலையில், வேலை செய்து வந்தார்.நேற்று காலையில், வெளியூரில் உள்ள மகள், தன் தாய்க்கு போன் செய்துள்ளார். பல முறை தொடர்பு கொண்டும் அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், உடனடியாக கிளம்பி தாய் வீட்டுக்கு வந்தார். வீட்டின் கதவு திறந்திருந்தது; உள்ளே சென்று பார்த்தபோது, தாய், பேரன் ஒரு அறையிலும், சகோதரி சமையல் அறையிலும் இறந்து கிடந்தனர்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். முனிராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த விசாரித்தனர்.தாய்க்கும், மகள் வசந்தாவுக்கும் அவ்வப்போது சண்டை ஏற்படுமாம். நேற்று முன்தினம் இரவும் சண்டை ஏற்பட்டு உள்ளது. மறுநாள் மூவரும் இறந்து கிடந்துள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.எஸ்.பி., யசோதா வன்டகோடி கூறுகையில், ''சம்பவ இடத்தை பார்க்கும்போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது போன்று தெரிகிறது. அவர்களின் உடலிலும் எந்தவித காயங்களும் இல்லை. தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், இறப்புக்கான காரணம் தெரிய வரும்,'' என்றார்.ராஜேஸ்வரி, வசந்தா, சாய் தர்மதேஜ்