உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாண்டியாவில் சொந்த வீடு வாங்காத எம்.பி.,க்கள்

மாண்டியாவில் சொந்த வீடு வாங்காத எம்.பி.,க்கள்

மாண்டியாவில் தற்போது, 'வீடு அரசியல்' துவங்கியுள்ளது. தான் வெற்றி பெற்றால், மாண்டியாவில் சொந்த வீடு வாங்கி, தொகுதியிலேயே வசிப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயஸ் படேல் உறுதி அளித்துள்ளார். ஆனால் இது வெறும் கண் துடைப்பு என, தொகுதி மக்கள் கூறுகின்றனர்.லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், மாண்டியாவில் சொந்த வீடு அரசியல் முன்னிலைக்கு வந்துள்ளது. மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வெற்றி பெற்று எம்.பி.,யானவர்கள், மாண்டியாவில் சொந்த வீடு வாங்கியதில்லை.அம்பரிஷ் எம்.எல்.ஏ.,வாக, எம்.பி.,யாக இருந்தவர். மாண்டியா, மத்துாரை சேர்ந்தவராக இருந்தும், அவருக்கு இந்த மாவட்டத்தில் சொந்த வீடு இருக்கவில்லை. 2013ல் மாண்டியா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட போது, அம்பரிஷ் பெங்களூரில் இருந்தார். தொகுதிக்கு வருவது இல்லையென, குற்றச்சாட்டு எழுந்தது. எனவே சாமுண்டீஸ்வரி நகரில் வாடகை வீடு ஏற்பாடு செய்து கொண்டார்.வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது, அதே வீட்டுக்கு வந்து செல்வாரே தவிர, ஒரு நாளும் அங்கு தங்கியது இல்லை. மாண்டியாவுக்கு வரும் போது, ஹோட்டலிலோ அல்லது தனக்கு நெருக்கமான அமராவதி சந்திரசேகர் வீட்டிலோ தங்குவார்.அதன்பின் எம்.பி.,யாக இருந்த செலுவராயசாமியும், பெங்களூரில் இருந்தே பணியை நிர்வகித்தார். இவருக்கு பின், ரம்யா லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவர் மாண்டியாவில் சொந்த வீடு வாங்கி, இங்கேயே தங்குவேன். மக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்திக்கலாம் என, உறுதி அளித்தார். ஆனால் மாண்டியாவின், வித்யாநகரின், கே.ஆர்.சாலையில் வாடகை வீடு எடுத்தார்.மாண்டியாவுக்கு வரும் போது, வாடகை வீட்டில் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் சந்தித்து பேசுவார். தொகுதியின் சில இடங்களுக்கு சென்று விட்டு, பெங்களூருக்கு திரும்புவார். ரம்யாவுக்கு பின், புட்டராஜு எம்.பி., யானார்.இவர, பாண்டவபுராவின், சினகுரலி கிராமத்தை சேர்ந்தவர். சினகுரலியில் வசித்தாலும், மாண்டியாவில் வாடகை வீடு எடுத்தார். இங்கு தொண்டர்களை சந்தித்த பின், தன் ஊருக்கு திரும்புவார். இவர் அதிக நேரம் தொகுதியில் இருந்ததால், மக்கள் எளிதாக சந்திக்க முடிந்தது.கடந்த 2019ல் எம்.பி.,யான சுமலதா, தன் கணவர் அம்பரிஷ் வாடகைக்கு பெற்றிருந்த அதே வீட்டையே வாடகைக்கு பெற்று கொண்டார். அவரும் தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின், தன் சொந்த ஊருக்கு செல்வார். இவர் தொகுதியில் இருந்த நாட்கள் மிகவும் குறைவு. மக்களை சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்தது இல்லை.மாண்டியாவின், ஹனகெரேவில் புதிய வீட்டு கட்ட, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுமலதா அம்பரிஷ், அடிக்கல் நாட்டினார். இதுவரை பணிகள் துவங்கவே இல்லை. மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ, மாண்டியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு, பணிகளை துவக்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது போன்ற நிகழ்ச்சிகளை துவக்கி வைத்துவிட்டு, மைசூருக்கோ அல்லது பெங்களூருக்கோ செல்வார்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் நிகில் குமாரசாமி போட்டியிட்ட போதும், மாண்டியாவில் சொந்த வீடு வாங்கி, அங்கேயே தங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.இப்போது மாண்டியா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஷ்ரேயஸ் படேலும், பிரசாரத்தின் போது மாண்டியாவில் தங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், 'இது வெறும் கண் துடைப்பு' என, மக்கள் கூறுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை