மலை, வனம், ஆறுகள், கோவில், நீர் வீழ்ச்சி என, அனைத்தும் அடங்கிய சுற்றுலா இடம் கிடைத்தால் பொழுதுபோக்குவது சுற்றுலா பயணியருக்கு ஜாலிதான்.வார இறுதியின் இரண்டு நாட்கள் விடுமுறையில், நுாற்றுக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வது கஷ்டம். எனவே சுற்றுப்புற சுற்றுலா தலங்களையே, பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வர்.மைசூரு சுற்றுப்பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலம் இருப்பதால், பலரும் மைசூருக்கு வருகின்றனர். அக்கம், பக்கத்தில் சுற்றுலா தலங்கள் இருப்பதால் அதிகம் செலவும் ஆகாது. இரண்டு நாட்களில் அதிகமான இடங்களை காணலாம்.மைசூரை ஒட்டி மாண்டியா, சாம்ராஜ்நகர், குடகு உள்ளன. இம்மாவட்டங்களில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. இங்கு தங்கி சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதுபோக்கி, மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி பெறுகின்றனர். மைசூரில் இருந்து குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியாவுக்கு செல்ல வாடகை வாகனங்கள் உள்ளன. பலரும் தங்கள் சொந்த வாகனத்தில் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு, இரவு நகருக்கு திரும்புகின்றனர்.குடகின், குஷால்நகர் அருகில் திபெத்தியரின் பொற்கோவில், ஹாரங்கி அணை, துபாரே யானைகள் முகாம், சிக்லிஹொளே அணை, அப்பி நீர்வீழ்ச்சி, மாந்தாலபட்டி என, பல சுற்றுலா இடங்கள் உள்ளன.மடிகேரியில் கோட்டை, அரண்மனை உள்ளன. இவற்றை பார்த்துவிட்டு, கீழே இறங்கினால் ஓம்காரேஸ்வரர் கோவிலை தரிசிக்கலாம். அங்கிருந்து பிரதான சாலைக்கு வந்து, ராஜா சீட்டுக்கு செல்லலாம்.இங்கு சிறிது நேரம் பொழுதுபோக்கி, மங்களூரு சாலை வழியாக சென்று, இடதுபுறம் பாகமண்டலா சாலையில் சென்றால், உடோத்து மொட்டே என்ற இடத்தில் கண்ணாடி பாலத்தை காணலாம். இதன் அருகில் தலகாவிரிக்கும் சென்று வரலாம்.மைசூரில் இருந்து சாம்ராஜ்நகருக்கு சென்றால், நஞ்சன்கூடு, பண்டிப்பூர், ஹிமவத் கோபாலசுவாமி மலை, சாமராஜேஸ்வரர் கோவில், கரிபெட்டா, சுவர்ணாவதி ஆறு, நாகமலை, மலை மஹாதேஸ்வரா கோவில், பிளிகிரி ரங்கனதிட்டு, ஜஹகீர் தார் பங்களா, மரடிகுட்டாவுக்கு செல்லலாம்.மைசூரில் இருந்து மாண்டியாவுக்கு சென்றால், கே.ஆர்.எஸ்., அணை, ஸ்ரீரங்கநாதர் கோவில், மேலுகோட்டே, பூவராஹ சுவாமி கோவில், காவிரி, ஹேமாவதி, லட்சுமண தீர்த்த சங்கம இடம், கொக்கரே பெள்ளூரு உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களை காணலாம். இதன் காரணமாகவே, பலருக்கும் மைசூரு பிடித்தமானதாக உள்ளது- நமது நிருபர் -.