ராஜநடை போட்ட மைசூரு தசரா யானைகள் கரும்பு, வெல்லம், பழங்கள் ஊட்டி வரவேற்பு
மைசூரு : தசரா விழாவுக்காக காட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒன்பது யானைகள், நேற்று அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டன. பூரண கும்ப மரியாதை, சிறப்பு பூஜைகள் செய்து, பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, அக்டோபர் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய அடையாளமான ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் 14 யானைகள், மூன்று கட்டங்களாக காட்டில் இருந்து மைசூருக்கு அழைத்து வரப்படுகின்றன. ஓய்வு
முதல் கட்டமாக, தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ உட்பட ஒன்பது யானைகள், இம்மாதம் 21ம் தேதி, ஹுன்சூரின் வீரனஹொசஹள்ளி கிராமத்தில் இருந்து, மைசூருக்கு அழைத்து வரப்பட்டன. இந்த யானைகள், அசோகபுரத்தில் உள்ள அரண்ய பவன் வளாகத்தில் ஓய்வு எடுத்து வந்தன. இந்நிலையில், மைசூரு மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா, புலிகள் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர், அரண்ய பவனில் யானைகளுக்கு நேற்று பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.பின், அங்கிருந்து மேள, தாளங்கள் முழங்க 3.6 கி.மீ., துாரத்தில் இருக்கும் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த யானைகள், வரிசையாக நடந்து சென்ற காட்சியை, சாலையின் இருபுறமும் நின்று அப்பகுதியினர் பார்த்து மகிழ்ந்தனர்.மொபைல் போன்களில், வீடியோ, படங்கள் எடுத்துக் கொண்டனர். வாகனங்களில் செல்வோர், ஆங்காங்கே நிறுத்திவிட்டு, யானைகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். பூரண கும்பம்
பின், அரண்மனை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காலை 10:10 மணி முதல் 10:30 மணிக்குள், ஜெயமார்த்தாண்டா நுழைவு வாயில் மூலம் அரண்மனை வளாகத்துக்குள் யானைகள் அழைத்து வரப்பட்டன. அரண்மனை சார்பில், பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.பூஜை செய்து, பாரம்பரிய நாட்டுப்புற கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாத பூஜை செய்யப்பட்டது. நுழைவு வாயிலில் வாழை மரங்கள் நட்டு, மாலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.அப்போது, எம்.எல்.ஏ.,க்கள் தன்வீர் செய்ட், ஹரிஷ்கவுடா, ஸ்ரீவத்சவா, கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், எஸ்.பி., விஷ்ணுவர்தன் உட்பட ஏராளமானோர் யானைகளுக்கு மலர் துாவி வணங்கினர்.கரும்பு, வெல்லம், வாழைப் பழங்களை யானைகளுக்கு ஊட்டினர். ஆரத்தி காண்பிக்கப்பட்டது. போலீஸ் பேண்ட் இசை குழுவினர், மேள, தாளங்கள் வாசித்து கொண்டு முன்னே செல்ல, தசரா யானைகள் ராஜநடை போட்டு கொண்டு பின்னே சென்றன.தசரா விழா முடியும் வரை யானைகள் அரண்மனை வளாகத்திற்குள் பராமரிக்கப்படும். அதன் பாகன்கள், வளர்ப்பாளர்கள் குடும்பத்தினர் வசதிக்காக, இங்கேயே தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.தசரா விழாவுக்காக முதல் கட்டமாக ஒன்பது யானைகள் வந்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மற்ற யானைகள் அழைத்து வரப்பட உள்ளன. அரசு உத்தரவின்படி, இம்முறை தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.மாலதி பிரியா,மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி, மைசூரு.