உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரிமினல் வழக்குகளில் லாபம் பெற துடிக்கும் தேசிய கட்சிகள்

கிரிமினல் வழக்குகளில் லாபம் பெற துடிக்கும் தேசிய கட்சிகள்

கர்நாடகாவில் 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சி நடந்தது. முதல்வராக சித்தராமையா இருந்தார். அன்னபாக்யா, ஷிரபாக்யா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இவற்றுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.இதனால் 2018 சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெறும் 78 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வி அடைந்தது.இதற்கு சித்தராமையா ஆட்சியில் நடந்த ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள்; திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டம்; குடகு மோதலில் துப்பாக்கி சூட்டில், இருவர் உயிரிழந்தது; தட்சிண கன்னடாவில் இரு சமூகத்தினர் இடையில் மோதல்; உத்தர கன்னடாவில் பரேஷ் மேத்தா என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்தது உள்ளிட்ட சில காரணங்கள் கூறப்படுகின்றன.

சர்ச்சை

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்றே, கார்வாரில் பாகிஸ்தான் கொடி பறந்தது. ஹனுமன் சாலிசா பாடல் கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது; ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சமூக வாலிபர்கள் பிரச்னை செய்தது; மாண்டியாவில் ஹனுமன் கொடியை அகற்றியது; விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியது என, காங்கிரஸ் அரசை சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. இதை எல்லாம் ஆட்சியாளர்கள் ஒரு வழியாக சமாளித்து வருகின்றனர்.இந்நிலையில், கல்லுாரி மாணவி நேஹா கொலை, காங்கிரஸ் ஆட்சிக்கு 'சம்மட்டி' அடிபோல் விழுந்து உள்ளது. நேஹாவை, பயாஸ் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொன்றார். அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் அவரை பாதுகாக்கவும், வழக்கை திசைதிருப்பவும் அரசு முயற்சி செய்வதாக, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சாவு வீட்டில் அரசியல்

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில், நேஹா கொலையை குறிப்பிட்டு பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரும், நேஹாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதன்பின்னணியிலும் அரசியல் உள்ளது.கொலை செய்யப்பட்ட நேஹா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ள 14 தொகுதிகளிலும், வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக, லிங்காயத் ஓட்டுகள் உள்ளன.லிங்காயத்துக்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசை ஆதரித்தனர். இதனால் இழந்த லிங்காயத் ஆதரவை மீட்டெடுக்கும் முயற்சியில் பா.ஜ., களம் இறங்கி உள்ளது. இதனால் கடுப்பான காங்கிரசார், சாவு வீட்டிலும் அரசியல் செய்வது, பா.ஜ.,வின் கலாசாரம் என்று கூறினர்.

காங்கிரஸ் திட்டம்

இதையடுத்து உத்தர கன்னடா பரேஷ் மேத்தா வழக்கை, பா.ஜ., கையில் எடுத்துள்ளது. பரேஷ் மேத்தாவின் மரணம் இயற்கையானது என, சி.பி.ஐ., அறிக்கை கூறினாலும், அக்கட்சியினர் இன்னும் விட்டபாடில்லை.பரேஷ் மேத்தா மரணத்தின்போது போராட்டம் நடத்திய பா.ஜ.,வினர் தேவையின்றி கைது செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தர கன்னடா காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர் கணவரான ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர், அடக்குமுறையை கையாண்டதாக, வெகுண்டு எழுந்துள்ளது.நேஹா கொலை, பரேஷ் மேத்தா மரணத்தை வைத்து, வடமாவட்டங்களில் ஓட்டு பெற, பா.ஜ., கணக்கு போடுகிறது. சுதாரித்துக் கொண்ட காங்கிரஸ், எம்.பி., பிரஜ்வலின் ஆபாச வீடியோ வழக்கை கையில் எடுத்துள்ளது.வடமாவட்ட பிரசாரங்களில், காங்கிரஸ் தலைவர்கள் பிரஜ்வலை பற்றி பேசி, பிரசாரம் செய்கின்றனர். இதனால் மூலம் பெண்கள் ஓட்டுகளை பெற, காங்கிரஸ் திட்டம் போட்டு உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ