கொச்சி கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இடுக்கி, திருச்சூர், வயநாடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலெர்ட்' கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாழ்வான பகுதி களில் மழைநீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. நேற்று முன்தினம் இரவு கொச்சியில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் வெள்ளம் தேங்கி இருந்தது.நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.திருச்சூரிலும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.இதற்கிடையே, வானிலை ஆய்வு மையம் நேற்று ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுத்திருந்தது. இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில், 11 செ.மீ., முதல் 20 செ.மீ., அளவுக்கு கனமழை பெய்தது.இடுக்கி மாவட்டத்தின் மலங்கரை அணையில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், நான்கு மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் தொடுபுழா, மூவாட்டு புலா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.