UPDATED : ஆக 28, 2024 06:49 AM | ADDED : ஆக 28, 2024 01:02 AM
மும்பை: மஹாராஷ்டிராவில், ஆட்டோவில் பயணித்த நர்சிங் பயிற்சி மாணவிக்கு, ஆட்டோ டிரைவர், குடிநீரில் மது கலந்து கொடுத்து, அவர் மயக்கமானதும் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 19 வயது நர்சிங் பயிற்சி மாணவி. இவர் பணி முடிந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட்டார். போகும் வழியில் ஆட்டோ டிரைவர் தண்ணீர் வேண்டுமா என கேட்டு, மது கலந்த தண்ணீர் பாட்டிலை தந்தார். அதை குடித்த நர்சிங் மாணவி சுயநினைவை இழந்தார். அவரை ஆட்டோவிலேயே வைத்து ஆளில்லாத இடத்திற்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்துவிட்டு, அங்கேயே இறக்கிவிட்டுச் சென்றுஉள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தன் பெற்றோருக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், ஆட்டோ டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கனவே வழக்கு பதிந்துள்ள போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோவை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் ஆட்டோ டிரைவர் சிக்குவார் என கூறியுள்ளனர். மஹாராஷ்டிராவின் பத்லாபூரில் சமீபத்தில் பள்ளியில், 4 வயது சிறுமியருக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இந்த விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்பட்டதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், ரத்னகிரி மாவட்டத்தில் ஆட்டோவில் வைத்து நர்சிங் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுஉள்ளார்.