உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இயற்கை வேளாண்மை திட்ட மோசடி; கோடிக்கணக்கில் கொள்ளை அம்பலம்

இயற்கை வேளாண்மை திட்ட மோசடி; கோடிக்கணக்கில் கொள்ளை அம்பலம்

போபால் : மத்திய பிரதேசத்தில் இயற்கை வேளாண்மை திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயற்கை வேளாண்மை திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிதி, அரசு அதிகாரிகளால் கையாளப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள 5,000 விவசாயிகளுக்கு, இயற்கை வேளாண்மை திட்டத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. அப்போது, அவர்களுக்கு தேவையான உரம், வலை உள்ளிட்ட பொருட்கள் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 2019 - 20ம் நிதியாண்டில் 6.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில், 2.9 கோடி ரூபாய், திட்டத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைக்கு வழங்கப்பட்டது. பயிற்சி மற்றும் பிற செலவுகளுக்கு, 2.93 கோடி ரூபாய் வேளாண் துறைக்கு வழங்கப்பட்டது. நில பரிசோதனை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு 1.08 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நிதி வழங்கி ஐந்தாண்டுகள் ஆன நிலையில், சம்பந்தப்பட்ட அனுப்பூர் மாவட்டத்தில் அதிகாரிகள் சமீபத்தில் கள ஆய்வு செய்தனர். பாஸ்காலி, சேஞ்சேரி, கோஹிந்திரா, பத்ரவுடி மன்மாரி, பெரிச்சூவா உள்ளிட்ட கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பெயரளவுக்கு உபகரணங்கள் வாங்கி, குறைந்த அளவிலான விவசாயிகளுக்கு மட்டுமே அவை வழங்கப்பட்டது அம்பலமானது. இந்த திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. மண்புழு வளர்ப்புக்காக கொடுக்கப்பட்ட படுக்கைகள், மழையில் இருந்து வீடுகளை பாதுகாக்க கூரை மேல் பரப்பப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல், ஒரு சில விவசாயிகள் தங்களுக்கு நில பரிசோதனை அறிக்கை வரவில்லை என புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நிதியை உள்ளூர் அதிகாரிகள் கோடிக்கணக்கில் மோசடி செய்தது உறுதியானது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தனர். மோசடி குறித்து கருத்து தெரிவித்த மாநில விவசாயத் துறை அமைச்சர் ஐடல் சிங் காஞ்சனா, ''ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. கலெக்டரிடமும் இது குறித்து ஆலோசிக்கப்படும். குற்றம் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை நிச்சயம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை