பரசுராம் மனைவிக்கு ஆண் குழந்தை
யாத்கிர்: யாத்கிர் நகர போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பரசுராம், 34. ஏழு மாதங்களுக்கு முன்பு, சைபர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சில நாட்கள் பணியாற்றிய இவர், மீண்டும் யாத்கிர் நகருக்கு இடமாற்றம் வாங்கினார்.அவரை மீண்டும் வேறு இடத்துக்கு அரசு மாற்றியது. அவர், யாத்கிர் நகர போலீஸ் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்ற முயற்சித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 2ல், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.இவருக்கு மாரடைப்பு ஏற்பட, யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சென்னாரெட்டி பாட்டீல் துன்னுாரும், அவரது மகன் பம்பனகவுடாவும் காரணம். பரசுராம் யாத்கிர் நகர் போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து பணியாற்ற, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் தரும்படி, எம்.எல்.ஏ.,வும், அவரது மகனும் நெருக்கடி கொடுத்தனர். அது மட்டுமின்றி ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக, பரசுராமின் மனைவி ஸ்வேதா குற்றஞ்சாட்டினார்.தலித் அமைப்பினருடன் போராட்டம் நடத்தி, எம்.எல்.ஏ., மற்றும் அவரது மகன் மீதும் புகார் அளித்தார். இதன்படி இருவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவாகியுள்ளது. விசாரணையும் நடக்கிறது.பரசுராம் இறந்தபோது, அவரது மனைவி ஸ்வேதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக ராய்ச்சூரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.நேற்று மதியம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆகஸ்ட் 2ல், பரசுராம் இறந்தார். செப்., 2ல் குழந்தை பிறந்தது. பரசுராமே மீண்டும் பிறந்து வந்ததாக குடும்பத்தினர் மகிழ்கின்றனர்.