உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெரும் எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகளுடன் பார்லி., கூட்டத்தொடர் இன்று துவக்கம்

பெரும் எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகளுடன் பார்லி., கூட்டத்தொடர் இன்று துவக்கம்

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று துவங்குகிறது. வக்பு மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதே நேரத்தில், வாக்காளர் அடையாள அட்டை, மணிப்பூர் கலவரம், அமெரிக்காவின் பரஸ்பர வரி, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஒப்புதல்

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், ஜன., 31ல் துவங்கி, பிப்., 13ல் முடிந்தது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று துவங்கி, ஏப்., 4 வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில், முக்கியத்துவம் வாய்ந்த வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரமாக உள்ளது. இதைத் தவிர, பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது, வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவது மத்திய அரசின் முக்கிய அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.அதேநேரத்தில் பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் வழங்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.இதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள தேர்தல் கமிஷன், ஆனால், ஓட்டுச்சாவடி உள்ளிட்டவை மாறுபடும் என்று கூறியுள்ளது.

ஆதரவு

இது போலியாக வாக்காளர்களை உருவாக்காது என்றும் விளக்கம் அளித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இதற்கு தீர்வு காண்பதாகவும் உறுதி அளித்துள்ளது.ஆனால், இந்தப் பிரச்னையை எழுப்ப திரிணமுல் காங்., முடிவு செய்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மணிப்பூரில் மீண்டும் வன்முறை துவங்கியுள்ளது, அமெரிக்கா பரஸ்பரம் வரி விதிப்பது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.லோக்சபா தொகுதி மறுவரையறையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என, தி.மு.க., கூறி வருகிறது. இதைத் தவிர, மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது. இந்தப் பிரச்னைகளை, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தி.மு.க., முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை