-காற்று மாசை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
புதுடில்லி:“காற்று மாசு அளவைக் கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,” என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. தலைநகர் டில்லியில் காற்றின் தரக்குறியீடு மிகமோசமான நிலையில் பதிவாகி வருகிறது.அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது:அடுத்த சில நாட்கள் முக்கியமானவை. காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அளவைக் கட்டுக்குள் கொண்டுவர அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.சாதகமான வானிலை காரணமாக தற்போது காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது. காற்று மாசை கட்டுக்குள் வைக்க பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.பயிர்க் கழிவுகளை எரித்தல், மற்றும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதித்திருந்த போதிலும் சிலர் அதை மீறுகின்றனர். அதேபோல வாகனப் புகையாலும் காற்று மாசு அதிகரிக்கிறது. இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும். தேவையற்ற கார் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். பயிர்க் கழிவுகளை எரிப்பதை தடுக்க அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.