என்னை கொன்று ரத்தம் குடிக்கிறார் மனைவி: பணி தாமதத்திற்கு போலீஸ் வினோத விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பணிபுரியும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தினமும் இரவில், மனைவி தன்னை கொன்று ரத்தத்தை குடிப்பது போல் கனவு வருவதால் துாக்கம் கெட்டு, பணிக்கு தாமதமாக வருவதாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், துணை ராணுவப்படையின், 44வது பட்டாலியனில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர், அடிக்கடி பணிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால், படைப்பிரிவின் அதிகாரி அவரிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.இதையடுத்து, தாமதத்திற்கான காரணம் குறித்து, கான்ஸ்டபிள் அளித்த எழுத்துப்பூர்வ பதில்: எனக்கும், என் மனைவிக்கும் இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்தது. அதிலிருந்து என் மனைவி நெஞ்சில் ஏறி உட்கார்ந்து, என் கழுத்தை கடித்து ரத்தத்தை குடிப்பது போல் தினமும் கனவு வருகிறது. இதனால், துாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானேன்; அதற்காக சிகிச்சையும் பெற்றேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இந்த வினோதமான விளக்க அறிக்கையின் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ளது.