உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றி நம்பிக்கையில் அரசியல் கட்சி தலைவர்கள்

வெற்றி நம்பிக்கையில் அரசியல் கட்சி தலைவர்கள்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என, இரண்டு தேசிய கட்சிகளும் கணக்குப் போட்டு வருகின்றன. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 20 இடங்களிலும், காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் வெற்றி பெறும் என, தங்களுக்கு தாங்களே கணக்கு போட்டுக் கொள்கின்றனர்.கர்நாடகாவில் 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., தனியாக போட்டியிட்டு 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் - ம.ஜ.த., கட்சிகள் கூட்டணி அமைத்து, தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன. ஒரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதா வெற்றி பெற்றார்.தற்போது அரசியல் சூழ்நிலை மாற்றம் காரணமாக, இம்முறை பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தன. பா.ஜ., 25 தொகுதிகளிலும்; ம.ஜ.த., மூன்றிலும்; காங்கிரஸ் 28 தொகுதியிலும் போட்டியிட்டு உள்ளன.தேர்தல் முடிந்ததும் முக்கிய தலைவர்கள் ஓய்வெடுக்க பல இடங்களுக்கு சென்றுள்ளனர். அதே வேளையில் சில தலைவர்கள் ஓட்டுப்பதிவு சதவீதத்தை கணக்கில் வைத்து, எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் கணக்கு

முதல் கட்டமாக நடந்த தேர்தலில் கர்நாடகாவின் தெற்கு மாவட்டங்களில் காங்கிரசின் வாக்குறுதித் திட்டங்கள் கை கொடுக்கும் என்றும், இரண்டாம் கட்டமாக வடக்கு மாவட்டங்களில் நடந்த தேர்தலில், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை, பா.ஜ., - ம.ஜ.த.,வின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அக்கட்சியினர் நம்புகின்றனர்.ஹாசன், சித்ரதுர்கா, சாம்ராஜ் நகர், கலபுரகி, சிக்கோடி, கொப்பால், பல்லாரி, தாவணகெரே, ராய்ச்சூரில் வெற்றி கிட்டும் என காங்கிரஸ் நம்புகிறது. அதேவேளையில், பெங்களூரு ரூரல், மாண்டியா, பெங்களூரு சென்ட்ரல், கோலார், சிக்கபல்லாப்பூர் தொகுதிகளில் கடும் போட்டி நிலவியதையும் அக்கட்சி ஒத்துக்கொள்கிறது.மாண்டியாவில் ம.ஜ.த.,வின் குமாரசாமிக்கு 60 முதல் 70 சதவீதம் ஒக்கலிகர்கள் ஓட்டு போட்டிருந்தாலும், பிற்படுத்தப்பட்டோர், லிங்காயத், சிறுபான்மையினர் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. தட்சிண கன்னடா, மைசூரு, பெங்களூரு வடக்கு, உடுப்பி - சிக்கமகளூரு, பாகல்கோட், ஹாவேரி, தார்வாட், ஷிவமொகா, விஜயபுராவில் பின்னடைவை சந்திக்கும் என்று கருதுகிறது.

பா.ஜ., எதிர்பார்ப்பு

பிரதமர் மோடியின் அலையால் வெற்றி பெறுவோம் என்ற சந்தோஷத்தில் இருந்தாலும், மாநில காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள், மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்றவை பா.ஜ.,வுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா மாநில தலைவராகி, முதன் முறையாக தேர்தலை எதிர்கொண்டுள்ளார். கடந்த முறை போன்று, இம்முறை முழு வெற்றி கிடைக்குமா என்பதில் அக்கட்சிக்கே சந்தேகம் உள்ளது.இதற்கு ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் தொடர்பான பாலியல் வழக்கும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 28லும் வெற்றி பெறுவோம் என, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் கூறி வந்தாலும், முழு வெற்றி கிடைப்பது கடினம் தான் என அக்கட்சியினரே கூறுகின்றனர். 18 முதல் 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று பெயர் கூறிப்பிட விரும்பாத பா.ஜ., தலைவர் ஒருவர் கூறினார்.காங்கிரஸ் வாக்குறுதித் திட்டங்கள் குறித்து தீவிர பிரசாரம் நடந்தாலும், நாட்டுக்காக பல பணிகள் செய்த மோடியை தான் வாக்காளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். எனவே, பா.ஜ., அதிக இடங்களை கைப்பற்றும் என்பதில் சந்தேகம் இல்லை என, மற்றொரு பா.ஜ., தலைவர் தெரிவித்தார்.பீதர், கலபுரகி, கொப்பால், பல்லாரி, சிக்கோடி, தாவணகெரே, சாம்ராஜ் நகர், ஹாசன், சித்ரதுர்கா, கோலார், பெங்களூரு ரூரல், பெங்களூரு சென்ட்ரல் உட்பட சில லோக்சபா தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது என்பதை சில பா.ஜ., தலைவர்களே ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

இன்று ஆலோசனை

தேர்தல் ஓட்டுப்பதிவை கணக்கிட்டு, இன்று பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், பொது செயலர்கள் பங்கேற்கின்றனர்.தேர்தல் பிரசாரம் நடந்த விதம், எந்தெந்த தொகுதியில் பின்னடைவு ஏற்படலாம், அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி