பெலகாவி பிரச்னையால் திசை மாறும் அரசியல்
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளது பெலகாவி. இந்த மாவட்டத்தில் மராத்தி மொழி பேசுபவர்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் பெலகாவியை, மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடுகிறது. பெலகாவி எங்கள் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி, விட்டு தர மாட்டோம் என்கிறது கர்நாடகா. பெலகாவி கர்நாடகாவுக்கு சொந்தம் என்பதை, மஹாராஷ்டிராவுக்கு எடுத்து கூறும் வகையில் சுவர்ண விதான் சவுதா கட்டப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர், சுவர்ண விதான் சவுதாவில் நடக்கிறது.இதற்கு அங்கு வசிக்கும் மராத்தியர்கள், எம்.இ.எஸ்., அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்கதையாக நடக்கும் ஒன்று. மராத்தியர்கள் ஓட்டு
இந்நிலையில் பெலகாவியில் கர்நாடக அரசு பஸ்சில் பயணித்த, மராத்தி வாலிபர்கள், நடத்துநர் மஹாதேவப்பா இடையில், கன்னடத்தில் பேசி டிக்கெட் எடுப்பதாக தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. நடத்துநர் தாக்கப்பட்டார். அவரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.கைதான வாலிபர்களுடன் உடன் பஸ்சில் பயணித்த பெண் அளித்த புகாரில், நடத்துநர் மீது போக்சோ வழக்கு பதிவானது. இங்கு இருந்து தான் தற்போது பிரச்னை ஆரம்பித்து உள்ளது.பெலகாவி மாவட்டத்தில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளிலும், எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், மராத்தியர்கள் ஓட்டுகளும் பங்கு வகிக்கிறது.பஸ் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இடம், பெலகாவி ரூரல் தொகுதி. இந்த தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கர்நாடக பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். நடத்துநர் பலிகடா
இவர் கூறியதன்படியே, நடத்துநர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டதாக, கன்னட அமைப்பினர் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். மராத்தியர் ஓட்டுகளை தக்க வைப்பதற்காக, கர்நாடக நடத்துனரை பலிகடா ஆக்கி உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.இந்த குற்றச்சாட்டு, பா.ஜ., கையில் அல்வா கிடைத்தது போன்று உள்ளது. நிலம், நீர், மொழி பிரச்னையில் அரசு சரியாக செயல்படவில்லை. பெலகாவியில், மராத்தியர்கள் அட்டகாசம் அதிகரித்து விட்டது. இதனை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசு உள்ளது. கர்நாடகாவில் பிரச்னை ஏற்படுத்தி விட வேண்டும் என்று, மஹாராஷ்டிரா அரசு செயல்படுவதாக பெலகாவியின் சில காங்கிரஸ் தலைவர்கள் பேச ஆரம்பித்து உள்ளனர்.தங்கள் மீதான தவறை மறைக்க, அமைச்சர் லட்சுமியை இப்பிரச்னையில் இழுத்து விட பார்க்கின்றனர் என்றும் கூறுகின்றனர். சாதாரண தாக்குதல் பிரச்னையில் ஆரம்பித்த இந்த வழக்கு, அரசியல் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்து உள்ளது. வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். - நமது நிருபர் -